சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக, அங்குள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான 96 பழைய குடியிருப்புகளை இடித்து அகற்றுவதற்கான மின்னணு ஒப்பந்தப்புள்ளியைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
புதிய தலைமைச் செயலகம் அமைக்க மீனவ அமைப்புகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது இடிப்பு நடவடிக்கைக்கான டெண்டர் வெளியாகியிருப்பது பட்டினப்பாக்கம் பகுதியில் மீண்டும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் கிராமத்தில், ஃபோர்ஷோர் எஸ்டேட் திட்டப் பகுதிக்கு உட்பட்ட பிளாக் எண் 102-ல், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான 3.82 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள 96 பழைய வாடகைக் குடியிருப்புகள் மற்றும் இதர கட்டடங்களை இடித்து அகற்றுவதற்காக இந்த டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க 2026 டிசம்பர் 1ஆம் தேதி காலை 11 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதியில் சுமார் 25.55 ஏக்கர் பரப்பளவில், 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சட்டப்பேரவை வளாகத்துடன் கூடிய புதிய தலைமைச் செயலகத்தை அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மொத்தம் மூன்று அரசுத் துறைகளுக்குச் சொந்தமான நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை ஆகியவற்றுக்குச் சொந்தமான நிலங்கள் இந்தத் திட்டத்தில் இடம்பெறுகின்றன.
இந்தத் திட்டத்துக்கு மீனவ அமைப்புகள் மற்றும் உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், கடலோரச் சூழலியல் சீர்குலையும் என்றும் கூறி போராட்டங்களும் நடைபெற்றன. பட்டினப்பாக்கத்தைச் சுற்றியுள்ள சுமார் ஒன்பது மீனவக் குடியிருப்புகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து இடம்பெயரும் அபாயம் இருப்பதாகப் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும், திட்டமிடப்பட்டுள்ள கடற்கரைப் பகுதிக்கு அருகே ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிடும் இடங்கள் இருப்பதால், கட்டுமானப் பணிகள் கடலோரச் சூழலியலையும் ஆமைகளின் இனப்பெருக்கத்தையும் பாதிக்கக்கூடும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் இந்தத் திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளன.
இதற்கிடையே, புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காகச் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் நில வகைப்பாடு மாற்றத்துக்கு அனுமதி அளித்திருந்தது. ஆனால், மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் தொடர் எதிர்ப்பால் திட்டம் கைவிடப்படலாம் அல்லது மாற்று இடத்துக்கு மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின.
அரசு மாற்று இடத்தைப் பரிசீலித்து வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. அண்ணா சாலை அருகே உள்ள தீவுத்திடல் அல்லது நந்தனம் போன்ற இடங்கள் மாற்று இடங்களாகப் பரிசீலிக்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில், பட்டினப்பாக்கம் பகுதி எவ்வாறு தேர்வு செய்யப்பட்டது என்பதற்கான அதிகாரப்பூர்வ ஆவணங்களோ, அதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் குறித்த தகவல்களோ பொதுத்துறையிடம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் திட்டத்தின் தேர்வு நடைமுறை குறித்து மேலும் பல கேள்விகளை எழுப்பியது.
இத்தகைய எதிர்ப்புகளும் மாற்று இடம் குறித்த விவாதங்களும் நிலவி வந்தாலும், திட்டம் தொடர்பான அரசாணை ரத்து செய்யப்படவில்லை. தற்போது 96 பழைய குடியிருப்புகளை இடித்து அகற்றுவதற்கான டெண்டர் வெளியிடப்பட்டிருப்பது, திட்டத்தை அரசு அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதனால் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படுமா, அல்லது மாற்று இடம் தேர்வு செய்யப்படுமா என்ற விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
இதற்கிடையே, இடிக்கப்படவுள்ள 96 குடியிருப்புகளும் பல ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி, மிகவும் பாழடைந்தும் சிதிலமடைந்தும் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பருவமழைக் காலத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால், பழைய கட்டடங்களை அகற்றுவது அவசியம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
இந்த இடிப்பு டெண்டரில் கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம், கட்டடங்களை இடிப்பதற்காக அரசே ஒப்பந்த நிறுவனங்களுக்குப் பணம் வழங்குவதில்லை என்பதாகும். மாறாக, கட்டடங்களில் உள்ள இரும்பு, செங்கல் உள்ளிட்ட மறுபயன்பாட்டுக்குரிய கட்டுமானப் பொருட்களை அகற்றி எடுத்துச் செல்வதற்காக ஒப்பந்த நிறுவனங்களே அரசுக்குப் பணம் செலுத்த வேண்டும்.
இதற்கான குறைந்தபட்ச ஏலத் தொகையாக 41 லட்சத்து 61 ஆயிரத்து 785 ரூபாய், ஜி.எஸ்.டி. நீங்கலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்கள் 42 ஆயிரம் ரூபாயை முன்பணமாகச் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய தலைமைச் செயலகத் திட்டத்தின் கட்டட வடிவமைப்பு குறித்தும் சில விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, சுமார் 25.55 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த வளாகத்தில், மொத்தம் 20 லட்சம் சதுர அடி கட்டடப் பரப்பளவு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், முதற்கட்டத் தகவல்களின்படி, சுமார் 15 முதல் 20 தளங்களைக் கொண்ட நவீன நிர்வாகக் கட்டடமாக இது வடிவமைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மீனவ மக்களின் வாழ்வாதாரம், கடலோரச் சூழலியல் பாதுகாப்பு, திட்டத்துக்கான நிலத் தேர்வு மற்றும் மாற்று இடங்கள் குறித்த விவாதங்கள் ஒருபுறம் தொடரும் நிலையில், மறுபுறம் பழைய குடியிருப்புகளை இடிப்பதற்கான டெண்டர் நடவடிக்கையை அரசு தொடங்கியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக அரசு முன்னெடுத்துள்ள முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தப் புதிய தலைமைச் செயலகத் திட்டம், அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் கவனத்தைப் பெற்றுள்ளது. திட்டம் எந்த இடத்தில், எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதும், எதிர்ப்புகளுக்கு அரசு அளிக்கப்போகும் பதிலும் அடுத்தகட்டத்தில் முக்கியத்துவம் பெறும்.
