மருத்துவ வரலாற்றில வித்தியாசமான நோய்களாலையும் கேள்விப்பட்டிராத பிரச்சனைகளாலும் பாதிக்கப்பட்ட பலரை நாம பார்த்திருப்போம். ஆனால் ஹாலிவுட் படங்களுக்கே டப் கொடுக்கிற அளவுக்கு மருத்துவ உலகம் இதுவரை கண்டிராத ஒரு பிரச்சனையில் சிக்கி இருக்கிறான் ஒரு சிறுவன்.
இப்படி ஒரு பிரச்சனை உலகத்திலேயே இவருக்கு மட்டும் தான் நிகழ்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மருத்துவத்ததுறையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள அந்த சிறுவன் யார்? அப்படி அவருக்கு ஏற்பட்ட பிரச்சனைதான் என்ன?
மதுரையில் இருக்கிற அரவிந்த் கண் மருத்துவமனைக்கு 16 வயசு சிறுவன் ஒருவர் வந்திருக்கிறார். அவருடைய இடது கண் இமை ஒரு மாதமாக வீக்கமாக இருந்துள்ளது. ஆனால், வலியோ, காயமோ இல்லை என மருத்துவர்களிடம் அவர் கூறியிருக்கிறார். வலி இல்லாத அந்த வீக்கத்துக்கான காரணம் தெரியாததால் அந்த சிறுவனின் கண்ணை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்திருக்கிறார்கள்.
சோதனையின் முடிவில்தான் மருத்துவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. வீங்கி இருக்கும் கண்ணிமைக்கு மேல் கடினமான வெள்ளை கட்டி போல ஏதோ தெரிந்துள்ளது. ஸ்கேன் செய்ததில் அந்த வீக்கத்துக்குள் நீட்டி கொண்டிருக்கும் பல் போன்ற கூர்மையான ஒன்று இருந்திருக்கிறது. ஒருவேளை அது டெரடோமா என்ற கட்டியாக இருக்கலாம் அல்லது எலும்பு வளர்ச்சியாக இருக்கலாம் என ஆரம்பத்தில் நினைத்த மருத்துவர்கள் சிறுவனுக்கு இமை மேல் கோரை பற்கள் வளர்ந்திருப்பதை பார்த்து ஷாக் ஆகி இருக்கிறார்கள்.
பொதுவாக வாய் பகுதியிலும், உடலின் சில இடங்களிலும் பற்கள் இடம் மாறி வளர்வது வழக்கமானதுதான். அப்படி வளரும் பற்கள் வாய் பகுதி, தாடை, மூக்கு, கன்னம் உள்ளிட்ட பகுதிகளில் வளரும். ஆனால் இது எதுவும் இல்லாமல் கண்ணுக்கு மேல் இமை பகுதியில் பல் வளர்ந்ததுதான் மருத்துவர்களை ஆச்சரியத்தில் உரைய வைத்திருக்கிறது.
உலகத்தில் கண்ணுக்கு மேல் பல் வளர்ந்த ஒரே மனிதர் இவர்தான் என மருத்துவர்களால் சொல்லப்படுகிறது. நல்வாய்ப்பாக அறுவை சிகிச்சை மூலம் அந்த பல் அகற்றப்பட்டிருக்கிறது. பல் வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகளோ, மரபணு மாற்றமோ அல்லது தொற்று காரணமாகவோ இதுபோல பல் இடம் மாறி வளர்ந்திருக்கலாம் என மருத்துவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
