வங்கக்கடலில் உருவான ‘முரசு’ புயல் தீவிரமடைந்து வரும் நிலையில், வட தமிழக கடலோர மாவட்டங்களான சென்னை மற்றும் திருவள்ளூருக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலர்ட்’
விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று மாலை முதல் காற்றின் வேகம் கணிசமாக அதிகரித்து, மணிக்கு 55 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிகக் கனமழையும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ‘முரசு’ புயல், வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தீவிரப் புயலாக மாறியுள்ளது. புயல் கரையைக் கடக்கும் நேரத்திலும் மற்றும் அதை ஒட்டியுள்ள நேரங்களிலும் சென்னை மற்றும் சுற்றுவட்டாரக் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 75 கி.மீ. வரை எட்ட வாய்ப்புள்ளது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மையின் பாதுகாப்பு எச்சரிக்கைகள்நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் பின்வரும் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன

சென்னை மற்றும் திருவள்ளூர் மக்கள் அத்தியாவசியத் தேவைகளின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளனர். மரங்கள், ராட்சத விளம்பரப் பலகைகள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து விழும் அபாயம் இருப்பதால், அவற்றின் அருகே வாகனங்களை நிறுத்துவதையோ அல்லது நிற்பதையோ முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். திறந்தவெளிகளான மேம்பாலங்கள் மற்றும் நதிப் பாலங்களில் செல்லும்போது சூறாவளிக் காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே, வாகன ஓட்டிகள் வேகத்தைக் குறைத்து மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடல் பகுதி கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவசர உதவிக்காக 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பாகத் தங்க வைக்க நிவாரண முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.பொதுமக்கள் வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றி, தேவையான அத்தியாவசியப் பொருட்களைப் பாதுகாப்பாகச் சேமித்து வைத்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
