தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களைக் கட்டுப்படுத்த தமிழக அரசு கொண்டுவந்த வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
தவெக சார்பில் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்த கட்சியின் இணைப் பொதுச்செயலாளரும், தற்போதைய அமைச்சருமான சி.டி.ஆர். நிர்மல் குமார், நீதிமன்றத்தில் மனுவைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
கடந்த 2025 செப்டம்பர் 27ஆம் தேதி, கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களை முறைப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) வகுத்தது.
அதன்படி, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில், 2026 ஜனவரி 5ஆம் தேதி ரோடு ஷோ நடத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அரசிதழில் (Gazette) வெளியிடப்பட்டன. இதில் அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்துவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருந்தன.

அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தவெக, இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இன்னும் அங்கீகாரம் பெறாத புதிய அரசியல் கட்சிகளைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், நடைமுறைக்குச் சாத்தியமில்லாத பல நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டியது.
மேலும், புதிய கட்சிகளின் அரசியல் செயல்பாடுகளை முடக்கும் நோக்கில் இந்தக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறி, அவற்றை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கைத் தவெக இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், தற்போது தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள சூழலில், அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ராஜேஷ் விவேகானந்தன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது.
அப்போது, தவெக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மனுவைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த அதே கட்சி, தற்போது ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில் அந்த வழக்கைத் திரும்பப் பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. மேலும், வழக்கைத் தாக்கல் செய்திருந்த சி.டி.ஆர். நிர்மல் குமாரே தற்போது அமைச்சராகப் பொறுப்பு வகிப்பதால், அவர் சார்பில் தொடரப்பட்ட மனுவை அவரே திரும்பப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நீட் தேர்வு, விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் நடத்திய வாழ்வாதாரப் போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் தொடர்பாகப் பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வழக்குகளைத் தள்ளுபடி செய்து தவெக அரசு அண்மையில் அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிராகத் தனது கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கையும் தவெக திரும்பப் பெற்றுள்ளது.
இதேபோல், தவெக அரசு அண்மையில் அறிவித்துள்ள ‘வெற்றிப் பயணத் திட்டத்திற்கு’ எதிராகத் தொடரப்பட்ட பொதுநல வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
