தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன், 2026 ஜூன் 16 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, முந்தைய திமுக அரசின் நிதி நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டின் தற்போதைய ஒட்டுமொத்த கடன் சுமை ரூ.13.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் நேரடி கடன் சுமை கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடியிலிருந்து ரூ.10 லட்சம் கோடியாக இருமடங்காக அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக, தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மீதும் தற்போது ரூ.1.28 லட்சம் கடன் சுமை இருப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், கோவிட் காலத்தை விட வருவாய் பற்றாக்குறை அதிகரித்து, 2025–26 நிதியாண்டில் ரூ.78,324 கோடியை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வாங்கிய கடன்களுக்காக ஆண்டுதோறும் ரூ.67,000 கோடியை வட்டியாக மட்டுமே செலுத்தி வருகிறது. இந்த வட்டி செலவு கடந்த ஐந்து ஆண்டுகளில் 61 சதவீதம் உயர்ந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.
மாநிலத்தின் சொந்த வரி வருவாய் (SOTR) தேசிய சராசரியை விட குறைந்து, 5.45 சதவீதம் என்ற அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் மைனஸ் 2.2 சதவீதமாகக் குறைந்து, குஜராத், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களை விட தமிழ்நாடு பின்தங்கியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனிமவளத் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ஊழல்களால் அரசுக்கு கணிசமான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக அரசின் மொத்த வருவாய் வரவில் 64.4 சதவீதம் நிதிச்செலவுகள், ஊழியர் சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் போன்ற தவிர்க்க முடியாத அன்றாடச் செலவுகளுக்கே பயன்படுத்தப்படுவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
முந்தைய திமுக அரசு புதிய முதலீடுகளை போதுமான அளவில் ஈர்க்காமல், அன்றாட நிர்வாகச் செலவுகளை சமாளிப்பதற்காக அதிகளவில் கடன்களை பெற்றதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் குற்றம் சாட்டியுள்ளார்.
துறை வாரியான நிதிநிலை குறித்தும் அறிக்கையில் பல முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, தமிழக போக்குவரத்துத் துறைக்கு மொத்தமாக ரூ.72,667 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த கடன் சுமை 2026 மார்ச் நிலவரப்படி ரூ.3.18 லட்சம் கோடியாக உள்ளது. இதில் தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) அதிகபட்ச கடனைச் சுமந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதி ஆணையத்தின் ஒதுக்கீட்டு முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களால், மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய வரிப் பகிர்வு மற்றும் நிதி வரத்து கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
மக்கள் தொகை மாற்றம் தொடர்பாகவும் வெள்ளை அறிக்கையில் முக்கிய எச்சரிக்கைகள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் முதியோர் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. 2011 ஆம் ஆண்டில் 10.6 சதவீதமாக இருந்த முதியோர் மக்கள் தொகை, 2031 ஆம் ஆண்டிற்குள் 18.2 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தேசிய சராசரியைக் காட்டிலும் அதிகமாகும். இதன் காரணமாக எதிர்காலத்தில் ஓய்வூதிய மற்றும் மருத்துவச் செலவுகள் அரசுக்கு பெரிய நிதிச் சவாலாக மாறக்கூடும் என அறிக்கை எச்சரிக்கிறது.
இந்நிலையில், அரசு இனி பெறும் கடன்களை அன்றாடச் செலவுகளுக்குப் பயன்படுத்தாமல், மெட்ரோ ரயில் திட்டங்கள், சாலை மேம்பாட்டு பணிகள், தொழிற்பூங்காக்கள் மற்றும் புதிய தொழிற்சாலைகள் போன்ற உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களுக்கே முதலீடு செய்யும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “வருவாயை விட செலவைக் கட்டுப்படுத்துவதே நல்ல நிர்வாகத்தின் அடிப்படை” என்ற திருக்குறளின் கருத்தை மேற்கோள் காட்டிய நிதி அமைச்சர் மரிய வில்சன், எதிர்காலத்தில் மாநிலத்தின் நிதி மேலாண்மையை சீரமைத்து, நிலையான வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
