பிரபல பாலிவுட் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘கோன் பனேகா குரோர்பதி 18’ (Kaun Banega Crorepati 18) நிகழ்ச்சியில் நடிகை சாய் பல்லவி, தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். மேலும், நிகழ்ச்சியின் தொகுப்பாளரான அமிதாப் பச்சனின் அன்பான செயலால் நெகிழ்ந்து அவரைக் கட்டித்தழுவிய தருணமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், இயக்குநர் நிதேஷ் திவாரியின் பிரம்மாண்ட திரைப்படமான ‘ராமாயணா’வில் ராமராக நடிக்கும் ரன்பீர் கபூருடன் இணைந்து சாய் பல்லவி பங்கேற்றுள்ளார். அப்போது, தனது வருங்கால வாழ்க்கைத் துணையிடம் எதிர்பார்க்கும் பண்புகள் குறித்துப் பேசிய அவர், பெரிய எதிர்பார்ப்புப் பட்டியல் எதுவும் தன்னிடம் இல்லை என்று குறிப்பிட்டார்.
தனது தவறுகளுக்கு மற்றவர்கள் மீது பழி சுமத்தாதவராகவும், தவறு செய்தால் அதை உணர்ந்து சுயபரிசோதனை செய்து திருத்திக்கொள்ளும் குணம் கொண்டவராகவும் தனது வருங்கால கணவர் இருக்க வேண்டும் என்று சாய் பல்லவி தெரிவித்தார். மேலும், வாழ்க்கையில் தான் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளும் தெளிவும், நல்ல பண்புகளும் அவரிடம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
அவர் நல்ல மனிதராகவும், அதிக சுயநலம் இல்லாதவராகவும் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட சாய் பல்லவி, அவருக்குச் சமைக்கத் தெரிந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றும் புன்னகையுடன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின்போது, சாய் பல்லவி மருத்துவம் படித்துவிட்டு சினிமாவுக்கு வந்தது குறித்தும் அமிதாப் பச்சன் கேள்வி எழுப்பினார். ஜார்ஜியாவில் மருத்துவம் படித்த சாய் பல்லவி, தான் திரையுலகிற்கு வந்தது விதியில் எழுதப்பட்ட ஒன்று என்ற வகையில் பதிலளித்தார். அப்போது குறுக்கிட்ட ரன்பீர் கபூர், “சார், அது கடவுள் எழுதிய பிரஸ்கிரிப்ஷன். இவர் நடிக்க வேண்டும் என்றுதான் கடவுள் எழுதியிருக்கிறார்” என்று நகைச்சுவையாகக் கூறினார். அவரது கருத்தைக் கேட்டு அரங்கமே சிரிப்பொலியில் நிறைந்தது.

நிகழ்ச்சியின் மற்றொரு தருணத்தில், ஹாட் சீட்டில் அமர்ந்திருந்த சாய் பல்லவிக்கு அமிதாப் பச்சன் தாமே ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்து உபசரித்தார். அப்போது, “அப்படியே அமர்ந்திருங்கள்” என்று அவர் கூறியதாக வெளியான ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. பாலிவுட்டின் மெகா ஸ்டாரான அமிதாப் பச்சன் காட்டிய இந்த எளிய அன்பால் நெகிழ்ந்த சாய் பல்லவி, தனது இருக்கையிலிருந்து எழுந்து சென்று அவரைக் கட்டித்தழுவினார். இந்த நெகிழ்ச்சியான காட்சி சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.
இதற்கிடையே, ரன்பீர் கபூர் அமிதாப் பச்சனிடம் தனது சிறுவயது தீபாவளி நினைவுகள் குறித்தும் கேட்டார். அதற்குப் பதிலளித்த அமிதாப் பச்சன், சிறுவயதில் தீபாவளி கொண்டாடும்போது, பக்கத்து வீட்டினரை விடத் தங்கள் வீட்டுப் பட்டாசுகள் அதிக சத்தத்துடனும் வேகமாகவும் வெடிக்க வேண்டும் என்பதுதான் நினைவில் இருப்பதாக நகைச்சுவையுடன் கூறினார். இதைக் கேட்டு சாய் பல்லவியும் ரன்பீர் கபூரும் சிரித்தனர்.
‘ராமாயணா’ திரைப்படத்தில் சீதையாக நடிக்கும் வாய்ப்பு குறித்துப் பேசிய சாய் பல்லவி, இந்தக் கதாபாத்திரத்தை அணுகிய விதத்தையும் பகிர்ந்துகொண்டார். வழக்கமாக ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும்போது, அதற்கு என்ன பங்களிக்க முடியும் என்பதைச் சிந்திப்பதாகக் கூறிய அவர், சீதையின் கதாபாத்திரத்தை ஏற்றபோது மட்டும் தன்னுள் என்ன ஞானமும் நற்பண்புகளும் வளரப்போகின்றன என்று யோசித்ததாகத் தெரிவித்தார்.
மேலும், இந்தக் கதாபாத்திரத்திற்காகச் சீதை அம்மனிடம் மனதாரப் பிரார்த்தனை செய்துவிட்டு, அதன் மூலம் கிடைக்கக்கூடிய ஞானத்தையும் நற்பண்புகளையும் கற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்துடன் நடிக்கச் சென்றதாகவும் சாய் பல்லவி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இதனுடன், பெண்கள் தங்களுக்குத் தேவையான வாழ்க்கையைத் தாங்களே அமைத்துக்கொள்வதும், பொருளாதார ரீதியாகச் சுயசார்புடன் இருப்பதும் மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் ‘ராமாயணா: பார்ட் 1’ திரைப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாகம் 2026 நவம்பர் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
