முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திமுக மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ், லஞ்ச ஊழல் வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
புழல் சிறையில் ‘ஏ கிளாஸ்’ வசதி
நீதிமன்றக் காவலில் உள்ள அன்பில் மகேஷ், நவம்பர் 6-ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார். தற்போது அவர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டிருந்த அதே அறைதான் இப்போதும் அன்பில் மகேஷுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சிறை சமையலறைக்கு அருகில் உள்ள ‘ஏ கிளாஸ்’ பிளாக்கின் 3-வது செல்லில் அவர் தங்கியுள்ளார்.
வருமான வரி செலுத்துபவர் என்ற அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின்படி அவருக்கு ‘ஏ கிளாஸ்’ வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

தனது உடல்நலக் குறைவைக் குறிப்பிட்டு சிறப்பு உணவுக்கு அனுமதி பெற்றுள்ளார். மேலும், சிறைக் கைதிகளுக்கான தனிச் சேமிப்புக் கணக்கில் பணம் செலுத்தி, தனக்குத் தேவையான பொருட்களைச் சிறைக்குள்ளேயே வாங்கிக் கொள்ளும் வசதியையும் அவர் பயன்படுத்தி வருகிறார்.
டிரைவர் உமாசங்கரின் வாக்குமூலம்
சிறையில் அன்பில் மகேஷ் வசதிகளை அனுபவித்து வந்தாலும், அவரைத் தன் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அன்பில் மகேஷின் ஓட்டுநர் உமாசங்கரிடம் நடத்தப்பட்ட கெடுபிடி விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது மற்றும் புதுப்பித்தல் செய்வதற்காக வசூலிக்கப்பட்ட பல நூறு கோடி ரூபாய் லஞ்சப் பணம் யார் யாருக்குக் கைமாறியது என்பதை உமாசங்கர் அக்குவேறாகப் பிட்டுப் பிட்டு வைத்துள்ளார்.
தொழிலதிபர் சண்முகப்பிரியா லிங்க்
உமாசங்கர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சென்னை பெருங்குடியில் ‘அப்ரோடைட் டிராப்ஸ்’ என்ற பிரம்மாண்ட ஜவுளிக்கடையை நடத்தி வரும் பெண் தொழிலதிபர் சண்முகப்பிரியா என்பவரின் பெயர் வெளிவந்தது.
தலைமறைவாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ முத்துக்குமார் மூலமாகச் சண்முகப்பிரியாவிற்கு கோடிக்கணக்கில் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதாகக் தெரியவந்தது. இதன் அடிப்படையில், நீலாங்கரையில் உள்ள சண்முகப்பிரியாவின் வீடு மற்றும் பெருங்குடி ஜவுளிக்கடையில் சிசிபி போலீசார் அதிரடிச் சோதனை நடத்தினர்.

விசாரணையில் அச்சமடைந்த சண்முகப்பிரியா பல முக்கிய உண்மைகளை ஒப்புக்கொண்டுள்ளார். லஞ்சப் பணம் இந்த ஜவுளி வியாபாரம் மூலம் கைமாற்றப்பட்டதா அல்லது கருப்புப் பணம் முதலீடு செய்யப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
பரவும் ஊழல் வலை
இந்த ஊழல் நெட்வொர்க் அன்பில் மகேஷோடு மட்டும் நிற்காமல், அவரது குடும்ப உறுப்பினர்கள் வரை நீண்டுள்ளது என்பதைச் சிசிபி போலீசார் ஆதாரங்களுடன் கண்டறிந்துள்ளனர். அன்பில் மகேஷின் சகோதரி எழிலரசி தனியார் பள்ளி நடத்தி வருபவர். மனைவி ஜனனி ஆகிய இருவருக்கும் இந்த லஞ்ச வசூல் விவரங்கள் முழுமையாகத் தெரிந்திருந்தன. எழிலரசி, வழக்கில் தொடர்புடைய முத்துக்குமாரிடம் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு “இன்று எவ்வளவு வசூல் ஆகியுள்ளது?” என விசாரித்ததாகக் கூறப்படுகிறது.
லஞ்சப் பணத்தின் ஒரு பகுதி எழிலரசியின் கணக்கிற்குத் திருப்பி விடப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை பல்லாவரம் பகுதியில் அறக்கட்டளை ஒன்றிற்குச் சொந்தமான இரண்டு பிரபல தனியார் பள்ளிகள் எழிலரசியின் பெயருக்குப் பினாமியாக மாற்றப்பட்டுள்ளன. இதன் மதிப்பு சுமார் ₹400 கோடி இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
அன்பில் மகேஷின் மனைவி ஜனனி மற்றும் சகோதரி எழிலரசி ஆகிய இருவரையும் விரைவில் நேரில் வரவழைத்து விசாரிக்கச் சிபிசிஐடி மற்றும் சிசிபி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அப்ரூவறாக மாறும் முத்துக்குமார்
விருத்தாச்சலம் முன்னாள் எம்.எல்.ஏ முத்துக்குமார் கடந்த மே மாதம் முதல் தலைமறைவாக இருந்து வந்தார். அன்பில் மகேஷின் கட்டுப்பாட்டில் வட மாநிலத்தில் தலைமறைவாக இருந்தபோதிலும், கடுமையான கட்டுப்பாடுகளால் அவர் சிறைக்கைதி போன்ற வாழ்க்கையையே வாழ்ந்து வந்தார்.
தமிழ்நாட்டில் இருந்து வரும் எந்த அழைப்பையும் ஏற்கக் கூடாது, அடையாள அட்டையைப் பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் அவர் தலைமறைவாக வைக்கப்பட்டிருந்தார்.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவரது முன்ஜாமீன் மனுத் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வேறு வழியின்றி சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எஸ். சத்தியமூர்த்தி முன்னிலையில் முத்துக்குமார் சரணடைந்தார்.
முத்துக்குமார் ‘அப்ரூவராக’ மாறத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்பில் மகேஷின் ஜாமீன் மனு மற்றும் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரும் காவல்துறையின் மனு ஆகியவற்றை நீதிபதி நவம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
முத்துக்குமார் அப்ரூவறாக மாறினால்: விசாரணையில் முத்துக்குமார் அரசுத் தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறினால், அன்பில் மகேஷ் மட்டுமின்றி அவரது ஒட்டுமொத்தக் குடும்பத்தினரும் சட்டப்பூர்வமாகப் பெரும் சிக்கலைச் சந்தித்து சிறை செல்ல நேரிடும்.
கைது செய்யப்படும் மனைவி -சகோதரி
சண்முகப்பிரியா வீட்டில் நடைபெற்ற ரைடு மற்றும் வாக்குமூலங்களின் அடிப்படையில், பினாமி சொத்துக்கள் மற்றும் பணப்பரிவர்த்தனையில் தொடர்புடைய ஜனனி மற்றும் எழிலரசி ஆகியோர் கைது செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே உள்ளன.
இந்த ஊழல் வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் தமிழக அரசியலில் மேலும் பல திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
