https://republictn.com/

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், கதாநாயகனாகவும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள நடிகர் யோகி பாபுவின் 300-வது திரைப்படமாக ‘அர்ஜுனன் பேர் பத்து’ உருவாகியுள்ளது. இந்த மைல்கல் திரைப்படம் வரும் ஜூலை 17, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அறிமுக இயக்குநர் ஆர். ராஜ்மோகன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை தேவ் சினிமாஸ் நிறுவனம் சார்பில் கிருத்திகா தங்கப்பாண்டி தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் டி. இமான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

யோகி பாபுவுடன் காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சென்றாயன் மற்றும் மைனா நந்தினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் யோகி பாபு வழக்கமான நகைச்சுவை பாத்திரத்தை விட, சீரியஸான மற்றும் உணர்வுபூர்வமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடின உழைப்பில் வாங்கிய ஒரு வாகனத்தை திருடும் கும்பல், அதை பலருக்கு விற்று மோசடி செய்கிறது. அந்த வாகனத்தை மீட்க யோகி பாபு மேற்கொள்ளும் போராட்டமே படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளது.

மேலும், இப்படத்தில் யோகி பாபு 10 வெவ்வேறு தோற்றங்களில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கற்பனைக் கதையாக இல்லாமல், பயன்படுத்தப்பட்ட பழைய வாகனங்கள் விற்பனையில் நடைபெறும் நிஜ வாழ்க்கை மோசடிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்தக் கதை வடிவமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படத்தின் விறுவிறுப்பான டீசரை முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு சிறப்பித்துள்ளார்.

இந்த நிகழ்வின்போது, யோகி பாபு ஹீரோவாக நடித்த ‘மண்டேலா’ திரைப்படம் தேசிய விருதுகளை வென்றதை நினைவுகூர்ந்து, படக்குழுவினருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இப்படத்தின் முதல் பாடலான ‘சாமி தந்த வரமே’ கடந்த ஜூன் 24-ஆம் தேதி காலை 11.11 மணிக்கு வெளியிடப்பட்டு, சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

சென்னையைச் சுற்றியுள்ள பல முக்கிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

யோகி பாபுவின் 300-வது திரைப்படம் என்பதாலும், சமூக விழிப்புணர்வை மையமாகக் கொண்ட கதைக்களத்தாலும் ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago