“எதிர்காலத்திற்காகச் சேர்த்து வைக்கும் பணம் இனி வெறும் காகிதம்தான்!” என டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் கூறியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியால், மனித சமுதாயம் ஒரு புதிய யுகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதில் சேமிப்பு, உழைப்பு மற்றும் பணத்தின் எதிர்காலம் குறித்து எலான் மஸ்க் கணித்துள்ளார்.
வீண் செலவு நியாயமா?
எக்ஸ் தளத்தில் BattleAngelviv என்ற பயனர் நகைச்சுவையாக ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தார். அதில், “எதிர்காலத்தில் AI மூலமாக எல்லாமே தாராளமாகக் கிடைக்கப் போகிறது. அதனால் நான் இப்போது செய்யும் வீண் செலவுகளை நினைத்துக் கவலைப்படுவதில்லை. இன்னும் சில ஆண்டுகளில் இந்தச் செலவுகளும், நாம் சேர்த்து வைக்கும் பணமும் அர்த்தமற்றதாகிவிடும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பதிவைப் பார்த்த எலான் மஸ்க், அதற்கு உடனே பதிலளித்தார். “அதிபுத்திசாலித்தனம் காரணமாக எதிர்காலத்தில் பொருட்கள், சேவைகள் அனைத்தும் மிக எளிதாகவும் ஏராளமாகவும் கிடைக்கப் போகின்றன. அப்படி இருக்கும்போது, தொலைதூர எதிர்காலத்திற்காக நீண்ட கால அடிப்படையில் பணத்தைச் சேமிப்பது முட்டாள்தனம்” என்று மஸ்க் நேரடியாகவே தெரிவித்துள்ளார்.
‘வேலை’ என்பது ஒரு விருப்பத் தேர்வாக மாறும்
எலான் மஸ்க்கின் கருத்துப்படி AI மற்றும் மனித உருவ ரோபோக்கள் உலகப் பொருளாதாரத்தை முற்றிலும் மாற்றியமைக்கப் போகின்றன. பொருட்கள் உற்பத்தி, சேவைகள் அனைத்தும் இயந்திரங்களால் கையாளப்படும்போது, உற்பத்திச் செலவு பூஜ்ஜியத்தை நோக்கி நகரும்.
மனிதர்கள் தங்கள் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கடினமாக உழைக்க வேண்டிய அவசியம் இருக்காது. வேலை செய்வது என்பது வயிற்றுப் பிழைப்புக்கான காரியமாக இல்லாமல், தனிப்பட்ட விருப்பமாக மட்டுமே இருக்கும்.
2036-க்குள் பணத்தின் மதிப்பு என்ன?
எலான் மஸ்க் இதுபோன்ற ஒரு கணிப்பை வெளியிடுவது இது முதன்முறையல்ல. ‘தி எகனாமிஸ்ட்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், 2036-ஆம் ஆண்டுக்குள் உலகப் பொருளாதாரத்தில் பணத்தின் முக்கியத்துவமும் தேவையையும் பெருமளவு குறைந்துவிடும் என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எல்லாப் பொருட்களும் தாராளமாகக் கிடைக்கும் ஒரு ‘வளங்கள் நிறைந்த உலகில்’, தற்போதைய பண முறைமை தனது பயன்பாட்டை இழந்துவிடும் என்பது அவரது கணிப்பு.
ஒரு சுவாரஸ்யமான கேள்வி
அனைத்துத் தேவைகளையும் AI மற்றும் தொழில்நுட்பமே பூர்த்தி செய்துவிடும் என்றால், மனித இனம் சேமிப்பையும் உழைப்பையும் கைவிட்டு அடுத்த கட்டத்திற்கு நகரத் தயாராக இருக்கிறதா? அல்லது இது ஒரு கற்பனையான அறிவியல் புனைகதையா? எலான் மஸ்க்கின் இந்தக் கருத்து பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
