Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு இளைஞர்களிடம் அத்தியாவசிய தேவையைத் தாண்டி, ஒரு ஆபத்தான போதையாக மாறி வருகிறது. இதனால் ஏற்படும் குடும்பக் கருத்து வேறுபாடுகளும், அதன் தொடர்ச்சியாக நிகழும் தற்கொலைகளும் சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே, தாயின் கண்டிப்பால் மனமுடைந்த கல்லூரி மாணவி ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே குறுக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மனைவி சுசீலா. இந்த தம்பதிக்கு கௌசல்யா தேவி என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். வெங்கடாசலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், கூலி வேலை செய்து தனது பிள்ளைகளை சுசீலா படிக்க வைத்து வந்துள்ளார். கௌசல்யா தேவி மேட்டூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் முதலாம் ஆண்டு தேர்வுகளில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாமல் தோல்வியடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையிலும் கௌசல்யா தேவி படிப்பில் கவனம் செலுத்தாமல், எப்போதும் செல்போனே கதி என அதிலேயே மூழ்கிக் கிடந்துள்ளார்.

இதையும் படியுங்க  "அந்த வீடியோ தான் க்ளூ…!" தருமபுரியில் 9-ஆம் வகுப்பு மகளையும் மனைவியையும் தீர்த்துக்கட்டிய தந்தை… லாரி முன் பாய்ந்த பகீர் பின்னணி!

இதனால் மனவேதனை அடைந்த தாய் சுசீலா, மகளை அவ்வப்போது எச்சரித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பும் கௌசல்யா தேவி தொடர்ந்து செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததால், இனிமேல் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்றும், படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சுசீலா மிகவும் கண்டிப்புடன் கூறியுள்ளார். தாயின் இந்த கண்டிப்பால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, கடந்த 15-ஆம் தேதி கல்லூரி முடிந்து வீடு திரும்பியதும், விவசாயத்திற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கௌசல்யா தேவி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பூலாம்பட்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago