கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி மீது எழுந்துள்ள பாலியல் புகார் விவகாரத்தில், திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி, தவெக தலைவர் சி. ஜோசப் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அவரை கடத்த முயன்றதாக கிருஷ்ணராயபுரம் தவெக கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில் கருத்து தெரிவித்துள்ள கனிமொழி கருணாநிதி, “காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய், குற்றம் சாட்டப்பட்ட தன் கட்சியினருக்கு முதலில் சுயஒழுக்கம் குறித்து பாடம் எடுக்கட்டும்” என்று விமர்சித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட தவெக நிர்வாகி மீது இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய், குற்றம் சாட்டப்பட்டவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு அறிவுரை வழங்குவதை விட முதலில் தனது கட்சித் தொண்டர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்கு முன்பும் சென்னை மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் தவெக நிர்வாகிகள் மீது பாலியல் புகார்கள் எழுந்ததைச் சுட்டிக்காட்டிய கனிமொழி, தவெக நிர்வாகிகள் சுயஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க விஜய் பாடம் நடத்த வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார்.
இந்தப் பதிவு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கரூர் பாலியல் புகார் விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
