Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கண்ணிகைப்பேர் பகுதியில் அமைந்துள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

இந்த துயரச் சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் மாநில காவல் துறைத் தலைவர் (டிஜிபி) ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த ஜூன் 21ஆம் தேதி, திருவள்ளூர் அருகே செயல்பட்டு வரும் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் திடீரென அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்த 9 பேரும் வட மாநிலங்களைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் ஆவர். அவர்களில் 7 பேர் ஒடிசா மாநிலத்தையும், 2 பேர் அசாம் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

மேலும், 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் பாதிப்புக்குள்ளாகி, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படியுங்க  ”விமானத்துக்குள் மல்யுத்தம் போல மோதல் – சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி!”

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. சம்பவம் நிகழ்ந்தபோது, தொழிலாளர்கள் அருகிலுள்ள ஓய்வு அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவல் உண்மையாக இருந்தால், அது கடுமையான மனித உரிமை மீறல் பிரச்சினைகளை எழுப்பக்கூடியதாக இருக்கும் என ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் தற்போதைய உடல்நிலை, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகை வழங்கப்பட்ட விவரங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அதன் இறுதி அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொழிற்சாலை உரிமையாளர் மோகன் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்க  நொடிப்பொழுதில் எடுத்த முடிவு… கல்லூரி மாணவியின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநர் - நடத்துநர்!

இந்த சம்பவம் தொழிற்சாலை பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago