https://republictn.com/

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த ‘ஜுராசிக் பார்க்’ திரைப்படத்தில் டாக்டர் ஆலன் கிராண்ட் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சாம் நீல், 78 வயதில் காலமானார். அவரது மறைவு உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

1993-ஆம் ஆண்டு வெளியான ‘ஜுராசிக் பார்க்’, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஹாலிவுட் சினிமாவுக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்த திரைப்படமாக அமைந்தது. குறிப்பாக, இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட பல பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான முதல் மிகப்பெரிய ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இது திகழ்ந்தது. நகரங்கள் முதல் கிராமங்கள் வரை ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது.

இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற டாக்டர் ஆலன் கிராண்ட் கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தது. டைனோசர்களிடமிருந்து மனிதர்களைக் காப்பாற்ற அவர் மேற்கொள்ளும் சாகசங்களும், துணிச்சலான செயல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சாம் நீல் உலகம் முழுவதும் பிரபலமான நடிகராக உயர்ந்தார்.

ஆனால், இந்தக் கதாபாத்திரத்தில் முதலில் சாம் நீலை நடிக்க வைக்க இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் திட்டமிடவில்லை என்பது பலருக்கும் தெரியாத சுவாரஸ்யமான தகவல். ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘இந்தியானா ஜோன்ஸ்’ திரைப்படங்களில் நடித்த ஹாரிசன் ஃபோர்டு தான் முதலில் டாக்டர் ஆலன் கிராண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால், கதை மற்றும் கால அட்டவணை உள்ளிட்ட காரணங்களால் அவர் அந்தப் படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு டிம் ராபின்ஸ், வில்லியம் ஹர்ட் உள்ளிட்ட பல நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனினும், பட்ஜெட் மற்றும் கால அட்டவணை உள்ளிட்ட காரணங்களால் அவர்களும் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முடியவில்லை.

இதையடுத்து, படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பே சாம் நீலை படக்குழு இறுதி செய்தது. நியூசிலாந்தைச் சேர்ந்த சாம் நீல், மிகக் குறுகிய காலத்திலேயே அந்தக் கதாபாத்திரத்திற்குத் தேவையான உடல்மொழி, தோற்றம் மற்றும் நடிப்பு பாணியை சிறப்பாகக் கற்றுக்கொண்டு நடித்தார். அவரது நடிப்பு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது.

2023-ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக அறிவித்த சாம் நீல், கடந்த ஏப்ரல் மாதம் முழுமையாக குணமடைந்ததாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவரது மறைவு திரையுலகினரையும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சாம் நீலின் மறைவிற்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள் மற்றும் சக கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago