கரூர் மாவட்டம், குளித்தலை அருகே திருமணமான இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து, ஆபாச சைகைகள் காட்டி அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்படும் தவெக நிர்வாகி, அப்பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள வரகூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய தவெக செயலாளராக இருந்து வருகிறார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவருக்கு கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து, ஆபாச சைகைகள் காட்டி, அத்துமீறி நடந்து கொள்ள முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அந்தப் பெண்ணை மிரட்டியும் வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அந்த இளம்பெண்ணை ரமேஷ் பின்தொடர்ந்து சென்று, தனது வாகனத்தை குறுக்கே நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறிய இளம்பெண்ணும், அவருடன் பயணம் செய்த உறவினர் சிறுமியும் கீழே விழுந்துள்ளனர்.
அதன்பின், உடன் வந்திருந்த உறவினர் சிறுமியிடமும் ரமேஷ் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்களும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களும் ஆத்திரமடைந்து ரமேஷை பிடித்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் ரமேஷுக்கு காயம் ஏற்பட்டதுடன், அவரது மூக்கு உடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த ரமேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில், ரமேஷ் அத்துமீறி நடந்து கொண்டது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ரமேஷ் மீது வழக்குப் பதிவு செய்ய குளித்தலை போலீசார் மறுப்பதாகவும், மாறாக அவரைத் தாக்கியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய முயற்சிப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. எனினும், போலீசார் தரப்பில் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்தச் சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக குளித்தலை காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
