Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டம், பிடாடி அருகே உள்ள மண்டலஹள்ளி கிராமத்தில், நில அளவீடு செய்ய வந்த அரசு அதிகாரிகளை பெண் விவசாயிகள் துடைப்பங்களால் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், கர்நாடக அரசு ‘கிரேட்டர் பெங்களூரு ஒருங்கிணைந்த டவுன்ஷிப்’ (Greater Bengaluru Integrated Township) திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. சுமார் 9,600 ஏக்கர் பரப்பளவில், ₹18,000 கோடி மதிப்பீட்டில் அதிநவீன ‘ஏஐ சிட்டி’ (AI City) அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த ஜூலை 13, 2026 அன்று கூட்டு அளவீட்டுக் குழு (JMC) அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மண்டலஹள்ளி கிராமத்திற்கு நில அளவீடு செய்ய வந்தனர்.

ஆனால், தங்களின் வளமான விவசாய நிலங்களை இந்தத் திட்டத்திற்காக வழங்க மறுத்து, அப்பகுதி விவசாயிகள் கடந்த 450 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்க  "இப்படியும் ஒரு கார் ஓட்டுநரா? காரின் முன்பக்கத்தில் தொங்கியபடி உயிருக்குக் கெஞ்சிய டிராபிக் போலீஸ்! நெஞ்சைப் பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ!"

இந்த நிலையில், நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளிடம், மாவட்ட ஆட்சியரின் எழுத்துப்பூர்வமான அனுமதிக் கடிதத்தைக் காட்டுமாறு விவசாயிகள் வலியுறுத்தினர். தங்களுக்கு முறையான முன்அறிவிப்பு வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது, அதிகாரிகள் தரப்பில் ஒருவர் பெண் விவசாயியிடம் அவமரியாதையாக பேசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, அங்கிருந்த பெண் விவசாயிகள் ஆத்திரமடைந்தனர்.

பச்சைத் துண்டு அணிந்திருந்த பெண் விவசாயிகள், நில அளவீட்டு பணியைத் தடுக்க அதிகாரிகளின் வாகனங்களை மறித்து, துடைப்பங்களால் விரட்டியடித்தனர். இதனால் நில அளவீட்டு பணியை தொடர முடியாமல், அதிகாரிகள் அவசரமாக அங்கிருந்து வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, அரசு அதிகாரிகளைத் தாக்கியது மற்றும் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 11 விவசாயிகள் மீது போலீசார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்க  "போலி பன்னீரை ஒழிக்க நினைத்த அரசுக்கு காத்திருந்த ட்விஸ்ட்! Milky Mist சாம்ராஜ்யத்தை அதிரவைத்த FSSAI நோட்டீஸ்!"

இதற்கிடையில், விவசாயிகளின் உணர்வுகளை கர்நாடக அரசு மதிக்க வேண்டும் என்றும், இந்த ஒருங்கிணைந்த டவுன்ஷிப் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளான பாஜக மற்றும் ஜேடி(எஸ்) தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago