விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள சங்கராபுரத்தில், மதுபோதையில் அடிக்கடி குடும்பத் தகராறில் ஈடுபட்டு வந்த கணவனை, அவரது மனைவி கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தூர் அருகே உள்ள சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் 34 வயதான மணி. இவரது மனைவி 28 வயதான திவ்யா பாரதி. திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆன நிலையில், மணி அப்பகுதியில் உள்ள அட்டை மில்லில் லோடுமேனாக பணியாற்றி வந்துள்ளார்.
மணி, அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து, தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் கடுமையான குடும்பத் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) இரவு, வழக்கம்போல் மதுபோதையில் வீட்டிற்கு வந்த மணி, திவ்யா பாரதியுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், ஆத்திரமடைந்த திவ்யா பாரதி, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மணியின் தலை மற்றும் உடலின் பல பகுதிகளில் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த மணி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவத்திற்குப் பிறகு, தகராறின்போது கணவனை தள்ளிவிட்டதால் அவர் வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக திவ்யா பாரதி முதலில் தெரிவித்ததாக போலீசார் கூறுகின்றனர். ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையும், போலீசாரின் தீவிர விசாரணையும் உண்மையை வெளிக்கொண்டு வந்தன.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், திவ்யா பாரதி கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சாத்தூர் தாலுகா போலீசார் அவரை கொலை வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்தக் கொலைக்கு குடும்பத் தகராறே காரணமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
