https://republictn.com/

தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே புறநோயாளர் (OP) சீட்டை முன்பதிவு செய்யும் புதிய ‘நலம் AI’ (Nalam AI) WhatsApp சாட்போட் சேவையை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே OP சேவையைப் பெறும் வகையில் ‘நலம் AI’ என்ற WhatsApp சாட்போட் சேவையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த சேவையைப் பயன்படுத்த ,96192 22999 என்ற எண்ணுக்கு WhatsApp-ல் “Hi” என்று அனுப்ப வேண்டும். அதன் பின்னர், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் சேவையைப் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

இந்த சாட்போட்டில் சுயப் பதிவு (Self Registration), மருத்துவர் பரிந்துரைகள், ஆய்வக அறிக்கைகள், அருகிலுள்ள அரசு மருத்துவமனைகள் குறித்த தகவல்கள், OP முன்பதிவு மற்றும் உதவி உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இடம்பெற்றுள்ளன.

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அரசு மருத்துவமனையைத் தேர்வு செய்து OP முன்பதிவை மேற்கொண்டால், அவர்களது WhatsApp எண்ணுக்கு OP சீட்டு PDF வடிவில் அனுப்பப்படும். அதில் வழங்கப்படும் பதிவு எண் மற்றும் PIN-ஐ மருத்துவமனையில் உள்ள தனிப்பிரிவில் தெரிவித்தால், அதன் அடிப்படையில் பதிவு சரிபார்க்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மருத்துவரை எளிதாகச் சந்தித்து சிகிச்சை பெற முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்டமாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நெஞ்சக நோய் (Department of Chest Medicine) பிரிவுக்கான புறநோயாளர் முன்பதிவு மட்டுமே இந்த WhatsApp சேவை மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 40-க்கும் மேற்பட்ட மருத்துவப் பிரிவுகள் செயல்பட்டு வரும் நிலையில், படிப்படியாக அனைத்து பிரிவுகளுக்கும் இந்த OP முன்பதிவு சேவை விரிவுபடுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த புதிய டிஜிட்டல் சேவை முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் 22 அரசு மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்பட உள்ளது.

இந்த புதிய திட்டத்தின் மூலம் மருத்துவமனைகளில் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. பொதுமக்கள் தங்களது வீட்டிலிருந்தோ அல்லது பயணத்தில் இருந்தபடியோ, மொபைல் போன் மூலம் எளிதாக OP சீட்டை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், ஆதார் அட்டையைப் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் OP டோக்கனைப் பெறும் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நடைமுறை மேலும் எளிமையாகவும், விரைவாகவும், பொதுமக்களுக்கு வசதியாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago