https://republictn.com/

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் தமிழ் ஆசிரியை பொன்ரேகா. இவர், சேரன்மகாதேவியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.

சிறுவயதிலிருந்தே தமிழ் மொழி மீது ஆழ்ந்த பற்று கொண்டிருந்த பொன்ரேகா, தமிழையே தனது உயர்கல்விப் பாடமாகத் தேர்வு செய்து படித்தார். ஆசிரியர் பணியில் சேர்ந்த பிறகு, திருவள்ளுவரும் திருக்குறளும் மீது கொண்ட ஈர்ப்பு மேலும் அதிகரித்தது.

திருக்குறளை மாணவர்களிடமும் உலக மக்களிடமும் கொண்டு சேர்க்கும் நோக்கில், தொடக்கத்தில் பல்வேறு சிறிய முயற்சிகளை மேற்கொண்டார். ஆளுயரத் துணியில் திருக்குறளை எழுதுதல், கையடக்கப் புத்தகங்களில் திருக்குறளை எழுதி அறிமுகப்படுத்துதல் போன்ற புதுமையான செயல்களில் ஈடுபட்டார்.

மேலும், திருக்குறளின் 133 அதிகாரங்களையும் ஏழு அடி உயரத் துணியில் சுமார் 7,000 முறை எழுதி மாணவர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், அவர்களிடையே திருக்குறள் மீது ஆர்வத்தையும் வளர்த்தார்.

அவரது பயிற்சியின் மூலம், மாணவர்கள் திருக்குறள் புத்தகத்தை தலைகீழாக வைத்தாலும், குறள்களை துல்லியமாக வாசிக்கும் திறனை பெற்றுள்ளனர். இதன் மூலம், மாணவர்களின் நினைவாற்றல் மற்றும் மொழித் திறனும் மேம்பட்டுள்ளது.

தமிழ் வகுப்பறைக்கு ஆசிரியை பொன்ரேகா வரும்போது, மாணவர்கள் உற்சாகத்துடன் அவரை வரவேற்று, திருக்குறளை ஆர்வத்துடன் கற்றுக்கொள்வது அப்பள்ளியின் சிறப்பாக மாறியுள்ளது.

இதற்கிடையில், திருக்குறளின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், சாதாரண காகிதப் புத்தகத்திற்கு மாற்றாக மரத்தால் திருக்குறள் புத்தகத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் பொன்ரேகாவுக்கு தோன்றியது.

அதன்படி, தேக்கு மரக்கட்டைகளை சேகரித்து, அவற்றை புத்தக வடிவில் செதுக்கி, 78 தேக்கு மரத்தகடுகளைப் பயன்படுத்தி 156 பக்கங்களைக் கொண்ட மரத்தாலான திருக்குறள் புத்தகத்தை உருவாக்கினார். அந்தப் புத்தகத்தில் 1,330 திருக்குறள்களையும் தனது கையால் எழுதியுள்ளார்.

இந்தப் புத்தகத்தில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர். மரத்தால் உருவாக்கப்பட்ட இந்த வித்தியாசமான திருக்குறள் புத்தகம், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் புத்தகத்தை எளிதில் எடுத்துச் செல்ல முடியாத நிலையிலும், அரசு புத்தகக் கண்காட்சிகள் மற்றும் பல்வேறு கண்காட்சிகளில் காட்சிப்படுத்தி, திருக்குறளின் சிறப்பை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார்.

தமிழ் மொழி மற்றும் திருக்குறளுக்காக அவர் மேற்கொண்ட அர்ப்பணிப்புமிக்க பணியைப் பாராட்டி, தமிழ்நாடு அரசு அவருக்கு ‘நல்லாசிரியர் விருது’ வழங்கி கௌரவித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், தனது அடுத்த கட்ட முயற்சியாக, 1,330 திருக்குறள்களையும் கியூஆர் (QR) குறியீடு மூலம் ஸ்கேன் செய்து படிக்கக்கூடிய நவீன புத்தகத்தையும் உருவாக்கியுள்ளார். அந்தப் புத்தகம் வரும் ஜூலை 15-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

அதில், ஜி.யு. போப் (G. U. Pope), முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உள்ளிட்ட ஏழு அறிஞர்களின் விளக்க உரைகளும் இடம்பெறவுள்ளன.

திருக்குறள் மட்டுமின்றி, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும் கையடக்கப் புத்தக வடிவில் எழுதி, தமிழ் இலக்கியங்களை புதிய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியிலும் பொன்ரேகா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இதுவரை 15-க்கும் மேற்பட்ட உலக சாதனைகளை படைத்துள்ளதாகக் கூறும் பொன்ரேகா, “திருக்குறளை ஒவ்வொரு மாணவரின் கைகளிலும் கொண்டு சேர்ப்பதே என் கனவு. பாடல்கள் மற்றும் புதுமையான கற்பித்தல் முறைகள் மூலம் மாணவர்களுக்கு திருக்குறளை கற்பித்து வருகிறேன்.

எனது மாணவி இசக்கியம்மாளை தலைகீழாக வைத்த திருக்குறள் புத்தகத்திலிருந்தே 1,330 குறள்களையும் வாசிக்கும் வகையில் பயிற்சி அளித்தேன். அதற்காக அவருக்கு உலக சாதனை அங்கீகாரமும் கிடைத்துள்ளது. ஆசிரியராக என்னைப் போலவே, என் மாணவியும் உலக சாதனையாளர் ஆனது எனக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “தமிழ் எழுத்துக்கள், வட்டெழுத்துக்கள் மற்றும் தமிழ் இலக்கியங்களை மாணவர்களிடம் புதுமையான முறையில் கொண்டு சேர்ப்பதே என் வாழ்நாள் இலக்கு” என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் மொழியும், திருக்குறளும் காலத்தால் அழியாமல் அடுத்த தலைமுறைக்கு சென்றடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடன் செயல்பட்டு வரும் ஆசிரியை பொன்ரேகாவின் இந்த வித்தியாசமான முயற்சிகள், மாணவர்களிடையே தமிழ் மீதான பற்றையும், திருக்குறள் மீதான ஆர்வத்தையும் வளர்க்கும் சிறந்த முன்னுதாரணமாக திகழ்கின்றன.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 days ago at 4 days ago