விவசாயிகளுக்கு அரசு ஏராளமான மானியங்களையும் சலுகைகளையும் வழங்கிய பிறகும் ஏன் அவர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள்?” என்ற கேள்விக்கு, இளம் விவசாயி பிரகாஷ் அளித்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் அந்த வீடியோவில் பேசியுள்ள பிரகாஷ், “அரசு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குகிறது. ரசாயன உரங்களுக்கு மானியம் வழங்குகிறது. விதைகளுக்கும் மானியம் வழங்குகிறது. மேலும், ஆண்டுதோறும் ரூ.6,000 நிதியுதவியும் வழங்குகிறது. இவ்வளவு சலுகைகள் வழங்கிய பிறகும் விவசாயிகளுக்கு ஏன் போதவில்லை என்று பலர் கேட்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
அதற்கு பதிலளித்த அவர், “அரசு இவ்வளவு மானியங்களையும் சலுகைகளையும் வழங்கினால், ஏன் பெரிய தொழிலதிபர்களும், உயர்கல்வி பெற்றவர்களும் விவசாயத் தொழிலுக்கு வருவதில்லை? அவர்கள் ஏன் இந்தத் தொழிலைத் தேர்வு செய்யவில்லை?” என்று எதிர்கேள்வி எழுப்பினார்.
“எங்களுக்கு இலவச மின்சாரம் தேவையில்லை. மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தத் தயாராக இருக்கிறோம். ரசாயன உரங்களுக்கான மானியமும் தேவையில்லை; சந்தை விலைக்கே வாங்கிக்கொள்கிறோம். விதைகளையும் நாங்களே வாங்கிக் கொள்கிறோம். ஆனால், அதற்கேற்ப எங்கள் விளைபொருட்களுக்கு நியாயமான விலை வழங்கப்பட வேண்டும்” என்றார்.
மேலும், “மானியங்கள் அனைத்தும் நீக்கப்பட்டால், ஒரு கட்டு கீரையின் விலை ரூ.30-ஐத் தாண்டும். ஒரு கிலோ நெல்லின் விலை ரூ.80 முதல் ரூ.100 வரை இருக்கும். அதன்படி, ஒரு கிலோ அரிசியின் விலை ரூ.250 முதல் ரூ.300 வரை உயரக்கூடும். அப்போதுதான் விவசாயிகளின் உழைப்புக்கு உரிய மதிப்பும், நியாயமான வருமானமும் கிடைக்கும்” என்று விளக்கமளித்தார்.
இதுகுறித்து பொதுமக்களிடம் போதிய புரிதல் இல்லாததால், விவசாயிகளைப் பற்றி தவறான கேள்விகள் எழுப்பப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், “ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புறநானூற்றில், ஒரு அரசன் நாட்டின் எல்லையை விரிவுபடுத்த முடியும்; ஆனால், மக்களை மகிழ்ச்சியாக வாழ வைக்க வேண்டுமெனில், உழவர்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்று கூறப்பட்டுள்ளது. மக்கள் மூன்று வேளை உணவு உண்ணும் நிலையை உருவாக்கினால்தான் எந்த ஆட்சியும் வெற்றிகரமாக அமையும்” என்று குறிப்பிட்டார்.
இறுதியாக, “இன்று ஆட்சியில் இருப்பவர்கள் இந்த உண்மையை உணராமல், ஆட்சி தங்களால் மட்டுமே சிறப்பாக நடைபெறுகிறது என்று நினைக்கிறார்கள். உண்மையில், விவசாயிகள் உழைத்து மக்களுக்கு உணவு உற்பத்தி செய்வதால்தான் நாடு இயங்குகிறது. இருந்தபோதிலும், விவசாயிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதும், வஞ்சிக்கப்படுவதும் வேதனைக்குரியது” என்று இளம் விவசாயி பிரகாஷ் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
