நல்ல வேலை, கைநிறைய சம்பளம் என ஆசை வார்த்தைகள் கூறி, ஆளில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து நகைகளையும் செல்போனையும் பறித்துச் சென்ற குற்றவாளிகளை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நம்பிக்கையுடன் பேசியவர்களை நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த இந்த கொடூரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்கால வாழ்விற்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்ற அந்த பெண்ணை, ஆட்கள் நடமாட்டமற்ற கண்மாய்க்கரைக்கு அழைத்துச் சென்று இந்த பாதகச் செயலை அரங்கேற்றியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த பெண், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து, ராமநாதபுரம் மாவட்டம் தோலூர் அருகே தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டியில் ஒரு முதியவரைப் பராமரிக்க ஆள் தேவைப்படுவதாக செல்போனில் வெளியான விளம்பரத்தைப் பார்த்ததாக, அனிதா என்ற பெண் அவரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. நிலையான வேலை மற்றும் நல்ல சம்பளம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த வேலைக்குச் செல்ல அந்த பெண் முடிவு செய்துள்ளார்.
அனிதா வழங்கிய செல்போன் எண்ணை தொடர்புகொண்டு மேலூருக்குச் சென்ற அந்த பெண்ணிடம், தாமரைப்பட்டியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் தொலைபேசியில் பேசி, “நானே வந்து அழைத்துச் செல்கிறேன்” என்று கூறியதாக தெரிகிறது.
அவர் வந்ததும், வேலை செய்ய வேண்டிய இடத்திற்குத்தான் செல்கிறோம் என்ற நம்பிக்கையில் அந்த பெண் அவரது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆனால், ஆட்கள் நடமாட்டமற்ற இருள் சூழ்ந்த பகுதியில் அவரை இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது. அங்கு ஏற்கனவே பதுங்கியிருந்த நால்வரிடம் அந்த பெண்ணை கோபாலகிருஷ்ணன் ஒப்படைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதன்பின்னர், அந்த நால்வரும் பெண்ணை மிரட்டி, மாறி மாறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், உடலாலும் மனதாலும் சோர்வடைந்த நிலையில் இருந்த அந்த பெண்ணிடமிருந்து அவரது தாலிச் செயின், வெள்ளிக் கொலுசு மற்றும் செல்போனையும் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
குற்றவாளிகள் தப்பிச் சென்ற பிறகு, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண், எப்படியோ அங்கிருந்து தப்பித்து அருகிலிருந்த கடை பகுதியை அடைந்துள்ளார். அங்கு இருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை கண்ணீருடன் கூறி உதவி கேட்டுள்ளார்.
அவர்களின் உதவியுடன் மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மலையரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அதன் விளைவாக, எதுவும் நடக்காதது போல் வீட்டில் இருந்த தும்பைப்பட்டியைச் சேர்ந்த செல்வகுமார், அரவிந்த், வினீத் மற்றும் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த வீரபாண்டி ஆகிய நால்வரையும், அவர்களுக்கு உதவியதாகக் கூறப்படும் கோபாலகிருஷ்ணனையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர், கைது செய்யப்பட்ட அனைவரையும் மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
விசாரணையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான செல்வகுமார் மீது ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக ஒரு வழக்கு இருந்தது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தின் எதிர்காலத்திற்காக வேலை தேடிச் சென்ற பெண்ணின் நம்பிக்கையை பயன்படுத்தி, அவரை ஏமாற்றி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அனைத்து கோணங்களிலும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
