https://republictn.com/

திருப்பூர் மாவட்டம், கொங்குமை ரோட்டில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12-ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பைகள் சோதனை செய்யப்பட்டபோது, ஒரு மாணவரிடமிருந்து கால் கிலோ கஞ்சா பொட்டலம், கஞ்சா சிகரெட்டுகள் மற்றும் சக மாணவர்களிடம் கஞ்சா விற்பனை செய்து பெற்றதாகக் கூறப்படும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல், பள்ளியின் தலைமை ஆசிரியர் சக்திவேல் அந்த கஞ்சாவை தீயிட்டு எரித்து ஆதாரங்களை அழித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பள்ளி வளாகத்திற்குள் போதைப்பொருள் புழக்கத்தை மூடிமறைக்க முயன்றதாகக் கூறப்படும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவராக இருந்த சகாயமேரி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்டியிட்டு மனு அளித்து கவனத்தை ஈர்த்தார்.

மாணவர்களின் நலன் கருதி கஞ்சா புழக்கம் குறித்து தொடர்ந்து புகார் அளித்த போதிலும், கல்வித்துறையும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மாறாக புகார் அளித்த ஒரே காரணத்திற்காக தன்னை பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் பதவியில் இருந்து விதிமுறைகளுக்குப் புறம்பாக நீக்கியுள்ளதாக சகாயமேரி குற்றம்சாட்டியுள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான இந்த விவகாரத்தில், புகார் அளித்தவர் மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், திருப்பூரில் உள்ள அரசு பள்ளிகளில் கஞ்சா பயன்பாடு இருப்பதாக தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தரப்பில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

கொங்குமை ரோட்டில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் மாணவர்களிடையே கஞ்சா பழக்கம் இருப்பதாகவும், அதனை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சகாயமேரி மனு அளித்திருந்தார்.

இந்த மனுவின் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கடந்த மே 20-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 55 நாட்கள் கடந்தும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையில், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் பதவியில் இருந்து சகாயமேரி எந்தவித முன்அறிவிப்போ, விளக்கமோ, விசாரணையோ இன்றி நீக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்த சகாயமேரி, “நான் உயிருடன் இருக்கும்போதே, எந்த அடிப்படையில் எனது பதவி காலியாக அறிவிக்கப்பட்டது?” என்று கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய சகாயமேரி, “மாணவர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகி அவர்களின் எதிர்காலம் சீரழியக் கூடாது என்பதற்காகவே நான் போராடி வருகிறேன். பள்ளியில் நடந்த கஞ்சா விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததற்காகவே என்னை பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டனர்.

என்னை நீக்குவதற்கு முன்பு எந்தவித அறிவிப்போ, விளக்கமோ, விசாரணையோ நடத்தப்படவில்லை. முறையான உத்தரவும் வழங்கப்படவில்லை. நான் உயிருடன் இருக்கும்போது, எந்த அடிப்படையில் எனது பதவி காலியாக அறிவிக்கப்பட்டது? எனது மரணச் சான்றிதழோ அல்லது வேறு ஏதேனும் ஆதாரமோ இருந்ததா? எனக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் முறையிட்டுள்ளேன். இரண்டு நாட்களுக்குள் உரிய பதிலும் நடவடிக்கையும் கிடைக்கவில்லை என்றால், எனது போராட்டம் தொடரும்” என்று தெரிவித்தார்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago