Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, பழைய இரும்பு வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், ரூ.8 கோடி ரொக்கப் பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகளும் சோதனையில் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் நல்லிக்கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.

செல்வகுமார் கடந்த ஆறு ஆண்டுகளாக அரசுக்குச் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி வரியை செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வரி செலுத்தக் கோரி ஜிஎஸ்டி அதிகாரிகள் பலமுறை சம்மன் அனுப்பியும், அவர் முறையான பதில் அளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீடு பூட்டப்பட்டிருந்ததால், அதிகாரிகள் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

இதையும் படியுங்க  "நாளை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் முதல்வர் விஜய் வழக்கு! சமரசமா? விவாகரத்தா?

சோதனையின்போது, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.8 கோடி ரொக்கப் பணம் கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஜிஎஸ்டி அதிகாரிகளின் சோதனையைத் தொடர்ந்து, தற்போது வருமான வரித்துறை அதிகாரிகளும் சோதனையில் இணைந்து, கைப்பற்றப்பட்ட பணம் எவ்வாறு வந்தது, அதற்கான வருமான ஆதாரங்கள் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், செல்வகுமார் ஒரு அரசியல் கட்சியின் ஆதரவாளர் என கூறப்படும் நிலையில், அந்த தகவல் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.

பழைய இரும்பு வியாபாரியின் வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.8 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது, ஈரோடு மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஜிஎஸ்டி மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago