உலகின் அதிக வெப்ப அபாயம் கொண்ட நகரங்களில் மதுரை 7-வது இடம்… ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வு எச்சரிக்கை
உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாகவும், சுமார் 2,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமாகவும் மதுரை விளங்குகிறது. தனித்துவமான நகர அமைப்பு, கண்மாய்கள், குளங்கள், வாய்க்கால்கள் என நீர்நிலைகள் நிறைந்த நகரமாக இருந்ததால், “ஆளவாய்” என்ற பெயராலும் மதுரை அழைக்கப்பட்டது.
ஆனால், இன்று அந்த பாரம்பரிய நகரமே உலகின் அதிக வெப்ப அபாயம் கொண்ட நகரங்களின் பட்டியலில் 7-வது இடத்தில் இருப்பதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு… இன்று முதல் அதிரடி மாற்றம்… நோட் பண்ணிக்கோங்க…!
வெப்ப அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் வாய்ப்பு, அதனால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அதை சமாளிக்கும் திறன் ஆகிய மூன்று முக்கியக் கூறுகளின் அடிப்படையில் மதுரையின் வெப்ப அபாயம் கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் அடர்த்தி, முதியோர் மற்றும் பாதிப்புக்கு உள்ளாகும் மக்களின் எண்ணிக்கை, வறுமை நிலை, குறைந்து வரும் பசுமைப் பரப்பு, சுகாதார வசதிகள் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு ஆகிய காரணிகளும் மதுரையை அதிக வெப்ப அபாயம் கொண்ட நகரமாக மாற்றியுள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
வெப்ப அபாயத்தை வெறும் அதிக வெப்பநிலையால் மட்டும் அளவிட முடியாது என்றும், சமூக மற்றும் பொருளாதார காரணிகளும் இணைந்தே உண்மையான அபாயத்தை உருவாக்குகின்றன என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து நீர்நிலைகள் ஆய்வாளர் கனகவள்ளி மதுரை மாநகராட்சி எல்லைக்குள் இருந்த சுமார் 150 நீர்நிலைகளில் 40 சதவீதத்திற்கும் மேற்பட்டவை அழிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தார்.
மேலும், மதுரையில் மக்கள் அடர்த்தி மிகவும் அதிகரித்திருப்பதாகவும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 14 லட்சம் மக்கள் 140 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வசித்து வந்த நிலையில், தற்போது 2026-ஆம் ஆண்டில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நிலை உருவாகியிருக்கலாம் என்றும் கூறினார்.
மக்கள் தொகை அதிகரிப்பால் குடிநீர் பயன்பாடு, கழிவுகள் உற்பத்தி, குளிர்சாதனப் பயன்பாடு மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இவை அனைத்தும் புவி வெப்பமயமாதலை மேலும் தீவிரப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர் பிரசாந்த் கூறுகையில், பாரம்பரிய பெருமைமிக்க மதுரை மாநகரில் பசுமைப் போர்வையை மீண்டும் உருவாக்குவது காலத்தின் கட்டாயம் என்றார்.
மதுரை மாநகருக்குள் எஞ்சியுள்ள நீர்நிலைகளை முறையாகப் பாதுகாத்து, அறிவியல் அடிப்படையிலான நீர் மற்றும் நீர்நிலை மேலாண்மையை செயல்படுத்துவது மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களுக்காக தொடர்ந்து மரங்கள் வெட்டப்படுவதாகவும், அதே அளவில் புதிய மரங்களை நடும் பணிகள் நடைபெறாததால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஒருபுறம் மரங்கள் வெட்டப்பட்டால், மறுபுறம் அதற்கு ஈடாக மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் சுற்றுச்சூழல் சமநிலை நிலைக்கும். தற்போது அந்த சமநிலை இல்லாததே வெப்பம் அதிகரிக்க முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலகளவில் அதிக வெப்ப அபாயம் கொண்ட நகரங்களில் மதுரை 7-வது இடத்தில் இருப்பது மிகவும் வேதனையானது என்றும், மதுரையை மீண்டும் பசுமை நகரமாக மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
வைகை நதியை மீட்டெடுப்பதுடன், நகரம் முழுவதும் அதிக அளவில் மரக்கன்றுகள் நட்டு அவற்றை பராமரிக்கும் பணியில் பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
உலகின் நீண்ட வரலாற்றைப் பெற்ற மதுரை மாநகரம், அதிக வெப்ப அபாயம் குறித்த இந்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக பசுமை வளத்தையும் சுற்றுச்சூழலையும் மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்காக மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகம் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மதுரையின் சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

[…] […]
[…] […]
[…] […]