கோவையில், தொழிலதிபரான மாமனார் வீட்டில் இருந்த சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள 1,000 சவரன் தங்க நகைகளைத் திருடியதாக மருத்துவரான மருமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கணபதி நகரைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முகபாண்டியன் (67) அளித்த புகாரின் பேரில், அவரது மருமகன் டாக்டர் எம். விக்னேஷ், விக்னேஷின் தாய் வாசுகி மற்றும் அவரது சகோதரி டாக்டர் எம். ஜீவிதா ஆகிய மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சண்முகபாண்டியனின் மகளுக்கும், கோவை ஜோதிபுரத்தைச் சேர்ந்த டாக்டர் விக்னேஷுக்கும் கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.
விக்னேஷின் குடும்பம் நிதி நெருக்கடியில் இருந்ததால், தனது மருமகன் மற்றும் அவரது குடும்பத்தினரை சண்முகபாண்டியன், கோவை காளப்பட்டியில் உள்ள தனது வீட்டில் தங்க வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்குப் பிறகு, காளப்பட்டியில் உள்ள அந்த வீட்டை தனது பெயருக்கு மாற்றித் தருமாறு டாக்டர் விக்னேஷ் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்திற்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அந்த வீட்டை சண்முகபாண்டியன் மற்றொரு நபருக்கு ரூ.15 கோடிக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த விக்னேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் திடீரென அந்த வீட்டை காலி செய்து வெளியேறினர்.
இதற்கிடையில், தம்பதியருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சண்முகபாண்டியனின் மகள் தனது பெற்றோர் வீட்டிற்குத் திரும்பியதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, தனது வீட்டிலிருந்த லாக்கரின் சாவியை சண்முகபாண்டியன், நம்பிக்கையின் அடிப்படையில் மருமகன் டாக்டர் விக்னேஷிடம் கொடுத்து வைத்திருந்தார்.
விக்னேஷ் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு சந்தேகமடைந்த சண்முகபாண்டியன், லாக்கர் சாவியை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், சாவியை வழங்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, லாக்கரை உடைத்து பார்த்தபோது, அதில் இருந்த சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள 1,000 சவரன் தங்க நகைகள் மாயமாகியிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து விக்னேஷ் தரப்பிடம் கேட்டபோது, வெறும் 100 சவரன் நகைகளை மட்டும் திருப்பி வழங்கிவிட்டு, மீதமுள்ள நகைகளை ஒப்படைக்க மறுத்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்ததாக தொழிலதிபர் சண்முகபாண்டியன் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், மருமகன் டாக்டர் எம். விக்னேஷ், அவரது தாய் வாசுகி மற்றும் சகோதரி டாக்டர் எம். ஜீவிதா ஆகிய மூவர் மீதும் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தற்போது தலைமறைவாக உள்ள மூவரையும் தேடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

[…] […]