பழனி கோயிலில் ரோப்கார், வின்ச் சேவைக்கு ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதி தொடக்கம் – இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ரோப்கார் மற்றும் வின்ச் சேவைகளுக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதி இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. நாள்தோறும் 100 பக்தர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பழனி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக ரோப்கார் மற்றும் வின்ச் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நேரடியாக டிக்கெட் பெற்று இந்த சேவைகளை பயன்படுத்தி வந்தனர்.
பக்தர்களின் சிரமத்தை குறைக்கும் நோக்கில், ரோப்கார் மற்றும் வின்ச் சேவைகளுக்கான டிக்கெட்டுகளை இணையம் வழியாக முன்பதிவு செய்யும் வசதியை கோயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, பக்தர்கள் கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களுக்கான நேரத்தைத் தேர்வு செய்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். அடிவாரத்திலிருந்து மலைக்கோயிலுக்கு சென்று மீண்டும் திரும்புவதற்கான ரோப்கார் பயணக் கட்டணம் ஒருவருக்கு ரூ.100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் முன்பதிவின் கீழ், நாள்தோறும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை 50 பேரும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மேலும் 50 பேரும் என மொத்தம் 100 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் இன்று முதல் இந்த சேவையை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இந்த புதிய வசதியை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கிடையில், கோயிலில் தினசரி நடைபெறும் ஆறு கால பூஜைகளில் பங்கேற்பதற்கான ஆன்லைன் முன்பதிவு வசதியும் தற்போது சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு கால பூஜைக்கும் தலா ஐந்து டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

[…] […]
[…] […]