Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னலூர் பன்னைப் பொதுக் கிராமத்தில் வசித்து வரும் 110 வயதைக் கடந்த மூதாட்டி பூசாந்திரம், ஐந்து தலைமுறைகளை கண்டு, இன்றளவும் யாரையும் சார்ந்து இல்லாமல் சுயமாக வாழ்ந்து வருவது அப்பகுதி மக்களிடையே வியப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக, தனது தாய் மற்றும் இரண்டு சகோதரர்களுடன் அகதியாக தமிழகம் வந்ததாக கூறப்படும் பூசாந்திரம், பின்னர் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னலூர் பன்னைப் பொதுக் கிராமத்தில் குடியேறினார். அதன் பின்னர் நமச்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நமச்சி விவசாயத் தொழிலில் ஈடுபட்டு குடும்பத்தை நடத்தி வந்தார். இந்தத் தம்பதியருக்கு கணேசன், அண்ணாதுரை, தனிக்காச்சலம் ஆகிய மூன்று மகன்களும், முத்துலட்சுமி மற்றும் ஜெயராணி ஆகிய இரண்டு மகள்களும் பிறந்தனர்.

இவர்களில் தனிக்காச்சலம், கடந்த 1983ஆம் ஆண்டு ஆடு மேய்க்கச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். மற்ற பிள்ளைகள் திருமணம் செய்து கொண்டு, குன்னலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தங்களது குடும்பங்களுடன் வசித்து வருகின்றனர்.

இதையும் படியுங்க  உலகின் முதல் டிரில்லியனர்..! வரலாறு படைத்தார் எலான் மஸ்க்..! ₹7 லட்சம் கோடியில் புதிய சரித்திரம்..!

தற்போது மூதாட்டி பூசாந்திரத்திற்கு 10 பேரப்பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் ஒன்பது பேருக்கு திருமணமாகி, அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்துள்ளனர். இதன் மூலம் கொள்ளுப் பேரப்பிள்ளைகள் வரை மொத்தம் ஐந்து தலைமுறைகளை தனது வாழ்நாளில் காணும் அரிய பாக்கியம் பெற்றவராக பூசாந்திரம் திகழ்கிறார்.

ஒரே குடும்பத்தில் ஐந்து தலைமுறையினர் ஒன்றாக வாழ்வது மிகவும் அரிதான நிகழ்வாகக் கருதப்படுவதால், இவரது வாழ்க்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குறிப்பாக, 110 வயதைக் கடந்த நிலையிலும் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல், தனது அன்றாட உணவை தானே சமைத்து, தனியாக வசித்து வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், தமிழக அரசின் முதியோர் உதவித்தொகை மற்றும் தன்னிடம் உள்ள கால்நடைகளை மேய்த்து பராமரிப்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பி, சுயமரியாதையுடனும் தன்னம்பிக்கையுடனும் தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

“வயது என்பது ஒரு எண்ணிக்கை மட்டுமே” என்பதை நிரூபிக்கும் வகையில், இன்றளவும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் பூசாந்திரம், கடின உழைப்பு, தன்னம்பிக்கை மற்றும் சுயசார்பு வாழ்க்கைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அப்பகுதி மக்களால் பாராட்டப்பட்டு வருகிறார்.

இதையும் படியுங்க  ஜூலை 1 முதல் 'நோ லிமிட்..'! பெட்ரோல் பங்க் கட்டுப்பாட்டை திடீரென மாற்றிய மத்திய அரசு..!

இலங்கையிலிருந்து அகதியாக வந்து தமிழகத்தில் புதிய வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, ஐந்து தலைமுறைகளை கண்டு, 110 வயதைக் கடந்தும் தன்னம்பிக்கையுடனும் சுயமாக வாழ்ந்து வரும் பூசாந்திரத்தின் வாழ்க்கைப் பயணம், பலருக்கும் ஊக்கமளிக்கும் வாழும் வரலாறாக திகழ்கிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago