https://republictn.com/

நீங்க ரீல்ஸ் எடுப்பிங்க.. நாங்க வேலை செய்யணுமா..? என அரசியல்வாதிகளின் தொல்லைகளால் பொறுமையிழந்த திருச்சி ஸ்ரீரங்கம் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் பொறுத்தது போதும்… பொங்கி எழு மனோகரா என திரைப்பட பாணியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், துறை சார்ந்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய தொகுதிக்குட்பட்ட அரசு அலுவலகங்களிலும், மருத்துவமனைகளிலும் திடீர் திடீரெ ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பொதுவாக தரம் உயர்த்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வது, பணிகளில் தொய்வு ஏற்படும் புகார்கள் வந்திருக்குமானால் அப்பணிகளை முடிக்கிவிடும் செயல்களில் ஈடுபடுவது வழக்கம்.

கமேனி இறுதிச்சடங்கில் இந்தியா..! இதை மறக்கவே மாட்டோம்..! உருகி உருகி நன்றி சொன்ன ஈரான் தூதரகம்..!

ஆனால், தமிழகத்தில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தவெக மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் என தங்கள் இஷ்டத்திற்கு ஏதோ அரசு அதிகாரிகளை அடக்க வந்தவர்கள் போல தங்களை காட்டிக் கொண்டு மருத்துவமனைகளிலும், ரேஷன் கடைகளிலும், ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் போடுவது, பள்ளி குழந்தைகளுக்கு விஜய் படத்தை கொடுத்து பாடச் சொல்வது, பள்ளிகளில் ரீல்ஸ் போடுவது என்று ஒரு தவறான முன்னுதாரணத்தை புகட்டி வருகின்றனர்.

இதனை கண்டித்து பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தும், அரசு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்த பின்னர் அமைச்சர் நிர்மல்குமார் ”கட்சியினர் எங்கும் ஆய்வு செய்யக்கூடாது.. ரீல்ஸ் போடக்கூடாது” என எச்சரித்தார். ஆனால், ”நீ யார் எங்களுக்கு சொல்வது? என்கிற ரீதியில் அவருடைய வார்த்தையை சட்டை செய்யாமல் தவெக கட்சியினர் தங்களது ரீல்ஸ் மோகத்தை கைவிடாமல் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், தவெக-வினரின் இந்த செயல்களை கண்ட மாற்றுக் கட்சியை சேர்ந்த சிலரும் இதுபோல மருத்துவமனைகளில் ரீல்ஸ் மோகத்தில் செல்வதும், வீடியோ எடுத்து மருத்துவர்களை மிரட்டும் தொனியில் வலைதளங்களில் வெளியிடுவது தற்போது பெருகி வருவதாலும், ரீல்ஸ் போடுவதாக மிரட்டி மறைமுகமாக கையூட்டும் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

தப்பு பண்றீனங்க கம்பீர்..! 15 வயது சிறுவனுக்காக சஞ்சு சாம்சன் நீக்கமா..? இந்திய அணியை வெளுத்து வாங்கிய அஸ்வின்..!

இந்நிலையில், மருத்துவமனைகளில் ரீல்ஸ் என்ற பேரில் மருத்துவர்களை பணி செய்ய விடாமல் வீடியோ எடுக்கிறார்கள். மருத்துவமனை பணிகள் பாதிக்கிறது என அவ்வப்போது மருத்துவர்கள் எடுத்துக் கூறினாலும் ரிலீஸ் போடுவது குறைந்ததாக தெரியவில்லை.

இதனையடுத்து, ‘பொறுத்தது போதும்.. பொங்கி எழு மனோகரா..” திரைப்பட பாணியல் திருச்சி, ஸ்ரீரங்கம், அரசு மருத்துவமனையில்
அனைத்து மருத்துவ துறை ஊழியர் கூட்டமைப்பின், செவிலியர் சங்கம், ஆய்வக பணியாளர் சங்கம் உள்ளிட்ட அனைத்து மருத்துவ பணியாளர்கள் மருத்துவத்துறை சார்ந்த பணியாளர் சங்கத்தின் சார்பில் அரசு மருத்துவர், பட்டமேற்படிப்பு மருத்துவர் சங்கத்தின் மாநில பொருளாளர் மருத்துவர் அரளீஸ்வரன் தலைமையில் மருத்துவமனை வளாகத்தில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் மருத்துவமனையில் சுமார் மருத்துவர்கள் செவிலியர்கள் இதர ஊழியர்கள் என 150 பேர் பணியாற்றி வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அரசு மருத்துவர் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர் சங்கத்தின் மாநில பொருளாளர் மருத்துவர் அரளீஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தொடர் நிகழ்வாக மருத்துவமனை வளாகத்தில் வரக்கூடிய நபர்கள் காணொளி ரீல்ஸ் எடுப்பதையும் சமூக வலைதளத்தில் பரப்புவதையும் நிகழ்வாக வைத்துள்ளனர்.

இதனால் பெண் மருத்துவர்கள், பணியில் உள்ள செவிலியர்களுக்கும், இதர ஊழியர்களுக்கும் பணித்திறன் பாதிக்கப்படுவதோடு அவர்களுடைய தனிப்பட்ட உரிமையும் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். ஏற்கனவே கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் மீது ஏற்பட்ட தாக்குதலின் போது வெளிப்புற காவல் பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கைகள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டது.
அதேபோல அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனை நிலையம், 24 மணி நேரம் அவசர சிகிச்சை சேவை வழங்கக்கூடியது, மருத்துவமனைகளுக்கும் உடனடியாக வெளிப்புற காவல் பிரிவு வழங்க வேண்டும்.

பணி நேரத்தில் தேவையில்லாமல் வீடியோ ரீல்ஸ் எடுக்க கூடிய நபர்களை கண்டறிந்து ஊடகங்களில் அரசு அறிவித்துள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவர்கள் மீது மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்துவதை தயங்ககூடாது. இது தொடர்கதை ஆனால் மருத்துவர்கள், செவிலியர் பணி திறன் பாதிக்கப்படும் என்பதை என்கிற வேதனையை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதுபோல் திருவரங்கம் அரசு மருத்துவமனையில் 3சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. கடந்த 40 நாட்களுக்கு முன்பு பிரசவ வார்டில் கணவன்- மனைவி வருகை தந்துள்ளனர். அவர்களிடம் மருத்துவர் ஒரு சிகிச்சை பரிந்துரை செய்தார். ஆனால் அவர்கள் இதை நாங்கள் வலைதளத்தில் பார்த்து உள்ளோம். இதுதான் நீங்கள் பரிந்துரை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதற்கு அந்த மருத்துவர் சிலவற்றை எடுத்துக் கூறிய போது அதை உடன் வந்தவர் வீடியோவாக எடுக்கிறார். மேலும் அதிக அளவில் வந்து ஒரு கும்பல் மனப்பான்மையோடு செயல்படுகின்றனர். எனவே கும்பலாக வருகிறவர்களையும் தடுக்க வேண்டும்.

ஊசி செலுத்தும் அறையில் ரீல்ஸ் பேசிக்கொண்டே ஊழியரிடம் வந்து இப்போது செவிலியர் ஊசி போடுவார், பின்பு கோபப்படுவார் என்று அவர்களை எரிச்சலூட்டுவது போல பேசுகின்றனர். இந்த இரண்டு நிகழ்வுகளும் நடந்துள்ளது. தற்போது இரண்டு நாட்களுக்கு முன்பு இரவில் அவசர சிகிச்சை பணியில் உள்ள மருத்துவர்களையும், செவிலியர்களையும் வீடியோ எடுத்துள்ளார். அங்கு கொடுக்கக் கூடிய சிகிச்சை முறைகளை வீடியோ எடுக்கிறார். வருகின்ற மருத்துவ பயனாளிகளுக்கு அவர்களை சிகிச்சை குறித்து தெரிந்து கொள்வதற்கான எல்லா உரிமையும் உள்ளது. ஆனால், அதை காணொளியாக பதிவு செய்கின்றனர்.

“நெருப்பாக மாறும் தூங்கா நகரம்! ஆக்ஸ்போர்டு ஆய்வின் பகீர் பின்னணி!”

குறிப்பாக பெண் மருத்துவர்கள், ஊழியர்களை வீடியோ எடுப்பது சட்டப்படி குற்றம் என்பது அவர்கள் புரிய வைத்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாங்கள் நிர்வாகத்துடன் ஏற்கனவே புகார் தெரிவித்துள்ளோம். நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோன்ற பிரச்சனை இரண்டு மூன்று முறை ஏற்கனவே நடந்துள்ளது. நாங்கள் நடவடிக்கை நோக்கி பார்க்கிறோம். நடவடிக்கை எடுத்திருந்தால் அந்த பதிவு வெளியே வந்து இருந்தால் மற்றவர்கள் அதைக் குறித்து யோசிப்பார்கள். அப்படி ஏதும் நடந்ததாக கவனத்திற்கு வரவில்லை.

வீடியோ எடுப்பவர்கள் ஆளாளுக்கு ஒரு கட்சியின் பெயரை தெரிவிக்கின்றனர். புகழ், லைக்ஸ் வாங்குவதற்காக இப்படி செய்கின்றனர்” என தங்களது கோபத்தை வெளிக்காட்டினர்.

-ஜான் கண்ணா, திருச்சி மாவட்ட சிறப்பு நிருபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago