https://republictn.com/

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், திருப்புவனத்தைச் சேர்ந்த சீமராஜா என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் சாலை விபத்து என போலீசார் தெரிவித்துள்ள நிலையில், காவல்துறையினரின் தாக்குதலால்தான் சீமராஜா உயிரிழந்தார் என்று அவரது உறவினர்கள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

போலீசார் தெரிவித்த தகவலின்படி, சீமராஜாவும் அவரது நண்பர் சூர்யாவும் இருசக்கர வாகனத்தில் மேலூர்–காரைக்குடி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர். திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில், மேலூர் அருகே கூத்தப்பன்பட்டி பகுதியில் அவர்களது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச் சுவரில் மோதியதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் சீமராஜா தலையில் பலத்த காயமடைந்தார். அவரை உடனடியாக மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காயமடைந்த சூர்யா தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து, சீமராஜாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, மருத்துவமனை முன்பு அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சீமராஜா சாலை விபத்தில் உயிரிழக்கவில்லை என்றும், காவல்துறையினர் தாக்கி சித்திரவதை செய்ததால்தான் அவர் உயிரிழந்தார் என்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதற்கிடையே, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சூர்யாவைச் சந்திக்க முதலில் போலீசார் அனுமதி மறுத்ததால் மருத்துவமனை வளாகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. பின்னர் உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலூர் போலீசார் திருட்டு வழக்கு மற்றும் சாலை விபத்து வழக்கு என இரு தனித்தனி வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் தரப்பில், சீமராஜா மற்றும் சூர்யா ஆகிய இருவர் மீதும் ஏற்கனவே திருட்டு வழக்கு இருப்பதாகவும், அந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்றபோது அவர்கள் தப்பிச் செல்ல முயன்றதாகவும், அப்போது ஏற்பட்ட சாலை விபத்தில்தான் சீமராஜா உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை சீமராஜாவின் உறவினர்கள் முற்றிலும் மறுத்துள்ளனர். காவல்துறையினர் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறைப்பதற்காகவே திட்டமிட்டு திருட்டு வழக்கை ஜோடித்துள்ளதாகவும், சீமராஜாவின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

சாலை விபத்தா? காவல்துறை தாக்குதலா? என்ற கேள்வியை எழுப்பியுள்ள இந்தச் சம்பவம் குறித்து, அனைத்து கோணங்களிலும் மேலூர் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago