மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா ஆலவேலி கிராமத்தைச் சேர்ந்த கனிவண்ணன் – கவிப்பிரியா தம்பதியரின் குடும்பத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனிவண்ணன் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். ஒரே தெருவைச் சேர்ந்த கனிவண்ணனும் கவிப்பிரியாவும் காதலித்து, கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது 6 வயது மற்றும் 3 வயதுடைய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இதற்கிடையில், நுண்கடன் நிதி நிறுவனத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் பணம் வசூலிக்கும் பணியில் இருந்த மயிலாடுதுறை அருகே அறிவேலூர் கிராமத்தைச் சேர்ந்த அபினேஷ் என்பவருடன் கவிப்பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தெரியவந்ததைத் தொடர்ந்து, கனிவண்ணனுக்கும் கவிப்பிரியாவுக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கவிப்பிரியா தனது கணவரைப் பிரிந்து, ஆக்கூர் பாரதத் தெருவில் உள்ள குடியிருப்பில் இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கவிப்பிரியாவும் அபினேஷும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஜூன் 25-ஆம் தேதி மதியம், தனது 3 வயது இளைய மகன் குளியலறையில் வழுக்கி விழுந்து தலையில் காயமடைந்ததாகக் கூறி, கவிப்பிரியா குழந்தையை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட குழந்தை, சிகிச்சை பலனின்றி ஜூன் 29-ஆம் தேதி உயிரிழந்தது.
இந்தச் சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாகக் குழந்தையின் தந்தை கனிவண்ணன், செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, ஜூன் 30-ஆம் தேதி அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, கவிப்பிரியாவையும் அபினேஷையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது, சம்பவம் நடந்த நேரத்தில் தான் அந்தப் பகுதியில் இல்லை என்றும், வெளியூரில் இருந்ததாகவும் அபினேஷ் முதலில் தெரிவித்தார்.
ஆனால், அந்தப் பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அபினேஷ் கவிப்பிரியாவின் வீட்டிலேயே இருந்ததை உறுதி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அதிர்ச்சிகரமான உண்மை வெளியாகியது.
அதன்படி, கவிப்பிரியா கீழே தண்ணீர் எடுக்கச் சென்றிருந்தபோது, 3 வயது குழந்தை தொடர்ந்து அழுது அடம் பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அபினேஷ், குழந்தையை பலமாகத் தள்ளியதில், அது சுவரில் மோதி தலையில் பலத்த காயமடைந்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தை மறைப்பதற்காக, குழந்தை குளியலறையில் வழுக்கி விழுந்ததாக இருவரும் நாடகமாடியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, கவிப்பிரியா மற்றும் அபினேஷ் மீது கொலை வழக்குப் பதிவு செய்த செம்பனார்கோவில் போலீசார், இருவரையும் தரங்கம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பின்னர், கவிப்பிரியா திருச்சி மகளிர் சிறையிலும், அபினேஷ் கடலூர் மத்திய சிறையிலும் நீதிமன்ற உத்தரவின்படி அடைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக செம்பனார்கோவில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

[…] […]
[…] […]