https://republictn.com/

ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதி, சமத்துவம், கல்வி மற்றும் அரசியல் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசனின் 167-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவின் மூலம் புகழ் வணக்கம் செலுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சமூகநீதியின் முன்னோடியாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகவும் திகழ்ந்தவர் இரட்டைமலை சீனிவாசன். கல்வி, சுயமரியாதை, சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக அவர் ஏற்றிய ஒளிவிளக்கு, தலைமுறைகளைக் கடந்து நம்மை வழிநடத்தும் நிலையான பேரொளியாகத் திகழ்கிறது.

அவரது உயரிய இலட்சியங்களைப் போற்றியும், பின்பற்றியும், சமத்துவமும் மனிதநேயமும் நிறைந்த தமிழ்நாட்டை உருவாக்குவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக துணிச்சலுடன் குரல் எழுப்பியதையும், ஐந்தாம் ஜார்ஜ் மன்னருடன் கைகுலுக்க மறுத்த அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க நிலைப்பாட்டையும் நினைவுகூர்ந்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது மரியாதையைச் செலுத்தியுள்ளார்.

மேலும், தமிழக அரசின் சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

1859-ஆம் ஆண்டு பிறந்த இரட்டைமலை சீனிவாசன், ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, சமூக நீதி மற்றும் அடிப்படை உரிமைகளுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய மாபெரும் சமூக சீர்திருத்தவாதியாகப் போற்றப்படுகிறார். மக்கள் அவரை அன்புடன் “தாத்தா” என்று அழைத்து மரியாதை செலுத்தினர்.

1900-களின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்கா சென்ற அவர், அங்குள்ள நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். அப்போது வழக்கறிஞராக இருந்த மகாத்மா காந்தியுடன் அவருக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. மகாத்மா காந்திக்கு தமிழில் பேசவும், “மோ. க. காந்தி” என்று தமிழில் கையெழுத்திடவும் கற்றுக்கொடுத்தவர் இரட்டைமலை சீனிவாசனே என்பது குறிப்பிடத்தக்கது.

1891-ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் பிறப்பதற்கு முன்பே, தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமூக உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து போராடத் தொடங்கியவர் இரட்டைமலை சீனிவாசன்.

1930 மற்றும் 1931-ஆம் ஆண்டுகளில் லண்டனில் நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாவது வட்ட மேசை மாநாடுகளில், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக அண்ணல் அம்பேத்கருடன் இணைந்து பங்கேற்று, அவர்களின் உரிமைகளுக்காக உலக அரங்கில் வலிமையாக குரல் எழுப்பினார்.

தமிழர்கள் பொதுவாக தங்கள் பெயருக்கு முன் தந்தையின் பெயரின் முதல் எழுத்தை மட்டும் பயன்படுத்தும் மரபு நிலவிய காலத்திலேயே, தனது தந்தையின் மீது கொண்டிருந்த அன்பும் மரியாதையும் காரணமாக, அவரது முழுப் பெயரான “இரட்டைமலை” என்பதையே தனது பெயருடன் இணைத்துக் கொண்டார்.

1880-களில் கோவை அரசினர் கலைக் கல்லூரியில் கல்வி பயின்றபோது, அங்கிருந்த 400 மாணவர்களில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரே மாணவர் இவர்தான். பல்வேறு சமூகப் பாகுபாடுகளுக்கு மத்தியில் கல்வி கற்று, தமிழகத்தின் முதல் பட்டியலினப் பட்டதாரியாக உயர்ந்தார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை சமூகத்தில் வலிமையாக ஒலிக்கச் செய்வதற்காக, 1893-ஆம் ஆண்டிலேயே “பறையன்” என்ற அரசியல் மாத இதழைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார்.

பொதுச் சாலைகள், பொதுக் கிணறுகள், பொதுக் கட்டிடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஒடுக்கப்பட்ட மக்களும் பயன்படுத்தும் உரிமையைப் பெற சட்டரீதியாகப் போராடி, அவர்களுக்கான பல முக்கிய உரிமைகளைப் பெற்றுத் தந்தார்.

அவரது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் போற்றும் வகையில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சிவில் உரிமைகளை வழங்கி பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட அரசாணையை தனது கல்லறையில் செதுக்க வேண்டும் என்று அவரது மனைவி அரங்கநாயகி விருப்பம் தெரிவித்தார்.

அவரது விருப்பத்தின்படியே அந்த அரசாணை அவரது கல்லறையில் செதுக்கப்பட்டது என்பது இரட்டைமலை சீனிவாசனின் சமூகப் போராட்டத்திற்கு கிடைத்த தனித்துவமான அங்கீகாரமாக இன்றளவும் நினைவுகூரப்படுகிறது

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago