காரைக்காலில் உள்ள ஒரு மருந்தகத்தில் காலாவதியான பால் பவுடர் விற்பனை செய்யப்பட்டதாகவும், அதனை குடித்த 6 வயது சிறுமி வாந்தி மற்றும் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த தம்பதியரான வேணுகோபால் – பில்லனா மேரி ஆகியோரின் 6 வயது மகளுக்காக, அப்பகுதியில் உள்ள ஒரு மருந்தகத்தில் இருந்து பால் பவுடர் வாங்கியுள்ளனர். அந்த பால் பவுடர் காலாவதியானது என்பதை அறியாமல், அதை பாலில் கலந்து குழந்தைக்குக் கொடுத்து பள்ளிக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாய் கூறுகையில், “ஒரு மெடிக்கல் ஷாப்பில் வாங்கிய பால் பவுடரை நேற்று காலை குழந்தைக்கு பாலில் கலந்து கொடுத்து பள்ளிக்கு அனுப்பினேன். பள்ளிக்குச் சென்ற சிறிது நேரத்திலேயே குழந்திக்கு வாந்தி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது.
பின்னர் பள்ளியில் இருந்து எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பிறகுதான் வாங்கிய பால் பவுடர் காலாவதியானது என்பது தெரியவந்தது. தற்போது குழந்தை காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “நாம் மருந்தகங்களில் பொருட்கள் வாங்கும்போது, அங்குள்ள பணியாளர்களை நம்பித்தான் வாங்குகிறோம். அவர்கள் விற்பனை செய்யும் பொருட்களின் காலாவதித் தேதியை சரிபார்த்து வழங்க வேண்டும்.
விலையைப் பார்ப்பதைப் போலவே, காலாவதித் தேதியையும் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். நான் நம்பிக்கையோடு வாங்கிய பொருளை குழந்தைக்குக் கொடுத்தேன். இதனால் என் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு யார் பொறுப்பு?” என வேதனை தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர் திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், காரைக்காலில் உள்ள அனைத்து மருந்தகங்களிலும் விற்பனை செய்யப்படும் மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களின் காலாவதித் தேதிகளை அரசு அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காலாவதியான பால் பவுடரைக் குடித்த சிறுமிக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் தொடர் வாந்தி ஏற்பட்டதாகவும், உடல்நிலை மோசமடைந்ததால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
குழந்தைகளுக்கான பால் பவுடர், மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களை வாங்கும் போது தயாரிப்பு தேதி (MFG) மற்றும் காலாவதித் தேதி (EXP) ஆகியவற்றை கட்டாயமாக சரிபார்க்க வேண்டும். மேலும், வாங்கப்படும் அனைத்து பொருட்களுக்கும் முறையான பில் பெற்றுக்கொள்வது, எதிர்காலத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும்.
காலாவதியான பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் மருந்தகங்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
