உலகம் முழுவதும் உள்ள கர்நாடக இசை வித்வான்களின் விருப்பத் தேர்வாக, சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தயாரிக்கப்படும் கடம் இசைக் கருவிகள் விளங்கி வருகின்றன.
இதன் காரணமாக, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான இசைக் கலைஞர்கள் மானாமதுரையை நாடி வருகின்றனர்.
மண்பாண்டப் பொருட்களுக்கு புகழ்பெற்ற நகரமான மானாமதுரையில், பல தலைமுறைகளாக கடம் தயாரித்து வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். அவரிடம் தங்களது இசைக் கச்சேரிகளுக்குத் தேவையான கடங்களை வாங்க உலகம் முழுவதும் இருந்து கர்நாடக இசை வித்வான்கள் வருவது வழக்கமாக உள்ளது.
மானாமதுரையைச் சுற்றியுள்ள கிராமப்புற கண்மாய்களில் இருந்து எடுக்கப்படும் உயர்தர களிமண்ணுடன் வெண்கலத் தூளை கலந்து பிசைந்து இந்தக் கடம் இசைக் கருவிகள் தயாரிக்கப்படுகின்றன.
பின்னர் அவை சூளையில் நன்கு வேகவைக்கப்படுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் கடங்களை வாசிக்கும்போது வெளிப்படும் தாள ஒலிகள், ஸ்ருதி மற்றும் லயத்தில் எந்தப் பிசகலும் இல்லாமல் தெளிவாக ஒலிப்பதே இதன் தனிச்சிறப்பாகும்.
பஞ்சபூதங்களின் அடையாளங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் கடம், இயற்கையின் அற்புதப் படைப்பாக மட்டுமின்றி, உலகின் முதல் இசைக் கருவியாக இருந்திருக்கலாம் என்றும் சில இசைக் கலைஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற கடம் வித்வான் கிரிதர் உடுப்பாவின் மாணவர்கள், மானாமதுரையில் தயாரிக்கப்படும் கடங்களை வாங்குவதை பெருமையாகக் கருதுகின்றனர்.
“கடம் என்றாலே எங்களுக்கு மானாமதுரை கடம்தான் நினைவுக்கு வரும். பல தலைமுறைகளாக ரமேஷ் குடும்பத்திடமிருந்தே நாங்கள் கடம் வாங்கி வருகிறோம்” என அவர்கள் தெரிவித்தனர்.
தாங்கள் வாங்கும் கடங்களின் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில், இசைக் கலைஞர்கள் அங்கேயே அவற்றை வாசித்துப் பார்ப்பதும் வழக்கம். இதனால் சில நேரங்களில் ரமேஷின் இல்லமே ஒரு தாளவாத்திய இசைக் கச்சேரி நடைபெறும் இடமாக மாறிவிடுகிறது.
கர்நாடகாவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கடம் வாசிப்பை கற்றுத்தருவதற்காகவே பலர் மானாமதுரையில் இருந்து கடங்களை வாங்கிச் செல்கின்றனர்.
உலகின் பல பகுதிகளில் கடம் எளிதில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், ஒரே நேரத்தில் 50 முதல் 150 கடங்கள் வரை வாங்கிச் செல்வதும் அவர்களது வழக்கமாக உள்ளது.
மானாமதுரை ரமேஷ் கூறுகையில், “கர்நாடகாவின் பெங்களூருவிலிருந்து கிரிதர் உடுப்பாவின் மாணவர்கள் ஆண்டுதோறும் வந்து சுமார் 150 கடங்களைத் தேர்வு செய்து வாங்கிச் செல்கின்றனர்.
உலகம் முழுவதும் கடம் கிடைக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாகும். வாங்க இயலாதவர்களுக்கும் அவர்கள் இந்தக் கடங்களை வழங்கி வருகின்றனர்” என்றார்.
கர்நாடக இசை வித்வான்கள் மட்டுமின்றி, இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், டிரம்ஸ் சிவமணி உள்ளிட்ட இசைத்துறையின் முன்னணி பிரபலங்களும் தங்களுக்குத் தேவையான கடம் இசைக் கருவிகளை வாங்க மானாமதுரை ரமேஷை நாடி வருகின்றனர்.
பல பிரபலங்கள் தேடி வரும் கைவினைக் கலைஞராக இருந்தாலும், இசை பயிலும் மாணவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு எந்த லாப நோக்கமும் இன்றி குறைந்த விலையிலேயே கடங்களை வழங்கி வருகிறார் ரமேஷ்.
அதற்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், “கலை வளர்வதற்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது” என்பதே தனது வாழ்வியல் கொள்கை எனத் தெரிவித்துள்ளார்.
