Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சென்னை வியாசர்பாடியில் 20 வயதான இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர் வியாசர்பாடியைச் சேர்ந்த நரேஷ் குமார் (20) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சென்னை வியாசர்பாடி பகுதியில் உள்ள சாமிநாதர் தோட்டம், சாமியார் மடம் முதல் தெருவில் அமைந்துள்ள சிவப்பிரகாச சுவாமிகள் மடத்தின் வளாகத்தில்தான் இந்த கொடூரச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

ரத்த வெள்ளத்தில், முகம் மற்றும் தலை கடுமையாகச் சிதைக்கப்பட்ட நிலையில் நரேஷ் குமாரின் உடல் கிடந்ததை அப்பகுதி மக்கள் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வியாசர்பாடி போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், நரேஷ் குமார் கல் மற்றும் பிற ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், இந்தக் கொலை ஜூலை 8, 2026 புதன்கிழமை அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரையிலான நேரத்தில் நடைபெற்றிருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.

இதையும் படியுங்க  விருந்தில் தொடங்கிய விவாதம்... கொலையில் முடிந்த கொடூரம்: கோவையில் அரங்கேறிய 'செல்ஃபி' பயங்கரம்!

இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த நரேஷ் குமாருக்கும், வியாசர்பாடி மல்லிப்பூ காலனியைச் சேர்ந்த சிலம்பரசன், பிரேம்குமார் ஆகியோருக்கும் இடையே நீண்டகாலமாக முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்துள்ளது.

இந்த முன்விரோதமே கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில், சிலம்பரசன், பிரேம்குமார் மற்றும் ரிஷி ஆகியோர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் அந்த மூன்று பேரையும் கைது செய்வதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேநேரத்தில், கொலைக்கான உண்மையான காரணம் என்ன, முன்விரோதம்தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பதை கண்டறியும் வகையில், சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago