Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே பணியில் இருந்த அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர், பயணிகளை பாதியிலேயே தவிக்கவிட்டு, அரசு பேருந்தை சாலையோரத்தில் சாவியுடன் நிறுத்திவிட்டு காதணி விழாவுக்குச் சென்று கறி விருந்து சாப்பிட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ராமேஸ்வரத்தில் இருந்து ஓலைக்குடா மற்றும் தனுஷ்கோடி வழித்தடத்தில் இயக்கப்படும் 4C என்ற அரசு பேருந்து, வழக்கம்போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.

அதன் பின்னர், தனுஷ்கோடி செல்ல வேண்டிய வழக்கமான வழித்தடத்தில் செல்லாமல், ராமேஸ்வரம் அருகே உள்ள பேக்கரும்பு பகுதிக்குப் பேருந்தை ஓட்டுநர் இயக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அங்கு நடைபெற்ற காதணி விழாவில் கலந்து கொண்டு கறி விருந்து சாப்பிட்டுவிட்டு, பின்னர் மீண்டும் பேருந்தை இயக்கியதாகக் கூறப்படும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும், அரசு பேருந்தை சாலையோரத்தில் சாவியுடன் நிறுத்திவிட்டு, அரை மணி நேரத்திற்கும் மேலாக அங்கிருந்து சென்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. அரசுக்குச் சொந்தமான பொதுப் போக்குவரத்து வாகனத்தை சாவியுடன் பொதுச் சாலையில் பாதுகாப்பின்றி விட்டுச் சென்றது, பயணிகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதையும் படியுங்க  "’ஜனநாயகன்’ பட பேனர் விழுந்ததால் அரசு பேருந்துக்கு நேர்ந்த சோதனை… சல்லி சல்லியாக நொறுங்கிய கண்ணாடி,

அதுமட்டுமின்றி, உரிய வழித்தடத்தில் இயக்கப்பட வேண்டிய பேருந்தை தனிப்பட்ட காரணத்திற்காக மாற்றுப் பாதையில் இயக்கியதால், பயணிகளுக்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஓட்டுநரின் இந்த பொறுப்பற்ற செயலை அப்பகுதியில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த போக்குவரத்துக் கழக கிளை மேலாளர், சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், உண்மை கண்டறியப்பட்ட பின்னர் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பணியில் இருந்தபோது அரசு பேருந்தை வழக்கமான சேவையில் இயக்காமல், தனிப்பட்ட நிகழ்ச்சிக்காக பயன்படுத்தியதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசு போக்குவரத்து ஊழியர்களின் பொறுப்புணர்வு குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago