Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழகத்தில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் ஏற்பட்ட விசித்திரமான குளறுபடி, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரையும் அவரது குடும்பத்தினரையும் அதிர்ச்சியிலும் மன உளைச்சலிலும் ஆழ்த்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவி புகழேந்தி, அண்மையில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 486 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதலிடம் பிடித்தார்.

இருப்பினும், தமிழ்ப் பாடத்தில் தனக்கு எதிர்பார்த்ததை விட குறைவாக 91 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அவர், தனது விடைத்தாள் நகலைப் பெற விண்ணப்பித்து அதைப் பெற்றார்.

விடைத்தாளை ஆய்வு செய்தபோது, வினா வாரியாகவும், பக்கம் வாரியாகவும் வழங்கப்பட்ட மதிப்பெண்களை கூட்டிப் பார்த்ததில் மொத்தம் 101 மதிப்பெண்கள் பதிவாகியிருந்தது தெரியவந்தது. மாணவி எழுதிய பதில்களின் அடிப்படையில் அவருக்கு உண்மையில் 97 மதிப்பெண்கள் கிடைத்திருக்க வேண்டும் என்பது தெரியவந்துள்ளது.

விடைத்தாளை திருத்திய ஆசிரியர், 38 மற்றும் 39 ஆகிய இரண்டு ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு தலா ஏழு மதிப்பெண்கள் வழங்கியதன் காரணமாக மொத்த மதிப்பெண் 101 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படியுங்க  அரசிதழில் வெளியான புதிய விதிகள்.. ஆசிரியர்களுக்கு லாபமா? நஷ்டமா?

ஆனால், இந்தப் பிழையை கவனிக்காமல் விடைத்தாளை கூர்ந்தாய்வு செய்த ஆசிரியரும், தலைமைத் தேர்வாளரும் உள்ளிட்ட மூன்று ஆசிரியர்களும் மொத்த மதிப்பெண்ணை 91 எனக் குறிப்பிட்டு, அதையே அதிகாரப்பூர்வ மதிப்பெண் பட்டியலிலும் பதிவு செய்துள்ளனர்.

100 மதிப்பெண்களுக்கான தேர்வில் 101 மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதுடன், அதனை 91 மதிப்பெண்களாகப் பதிவுசெய்திருப்பது மதிப்பீட்டு நடைமுறையில் பெரும் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

இந்தக் குளறுபடிகளால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள மாணவி புகழேந்தி, தனது விடைத்தாளை முழுமையாக மறுஆய்வு செய்து, மதிப்பீட்டில் ஏற்பட்ட தவறுகள் குறித்து உரிய விசாரணை நடத்துவதோடு, சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுத்து, தனக்கு உரிய மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று கல்வித்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago