சென்னை தேனாம்பேட்டை எஸ்.எம். நகர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில், துணிகளை காயவைக்கச் சென்ற பெண் ஒருவர், தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததால் மூன்றாவது மாடியிலிருந்து கீழே தவறி விழுந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
சென்னை தேனாம்பேட்டை எஸ்.எம். நகர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் வசித்து வருபவர் லட்சுமி. இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
40 ஆண்டுகளுக்கு மேலாக பழமையான இந்தக் குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று மூன்றாவது மாடி பால்கனியில் துணிகளை காயவைக்க லட்சுமி சென்றுள்ளார். அப்போது பால்கனியின் தடுப்புச் சுவர் திடீரென இடிந்து விழுந்ததால், அவர் தலைகுப்புற மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில், லட்சுமியின் தலை, கை, கால்கள் உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் குடியிருப்பு கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று மூன்றாவது மாடி பால்கனியில் துணிகளை காயவைக்க லட்சுமி சென்றுள்ளார். அப்போது பால்கனியின் தடுப்புச் சுவர் திடீரென இடிந்ததால், அவர் தலைகுப்புறக் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
மேலும், இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க, பழுதடைந்த குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான மாற்று குடியிருப்பு வசதிகளை உடனடியாக ஏற்பாடு செய்து வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூன்றாவது மாடியிலிருந்து பெண் ஒருவர் கீழே விழுந்த இந்த அதிர்ச்சி சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
