Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

சென்னைக்கு ரூ.11.09 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் கடத்தி வரப்பட்ட வழக்கில், விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், மலேசியாவுடன் தொடர்புடைய பெண் ஒருவர் உட்பட மேலும் மூவரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது கிடைத்த புதிய தகவல்களின் அடிப்படையில் விசாரணை சர்வதேச அளவுக்கு விரிவடைந்துள்ளது.

இந்த வழக்கில், மலேசியாவில் இருந்து செயல்பட்ட பெரிய கள்ளநோட்டு கும்பலின் வலையமைப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, சென்னை மாநகர காவல்துறையினர் மற்றும் சிபிசிஐடி (CB-CID) அதிகாரிகள் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீசாருக்கு, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கள்ளநோட்டுகள் கைமாற உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருச்சி ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) செந்தில்குமார் தலைமையிலான போலீசார், சென்னை குற்றப்பிரிவு போலீசாருடன் இணைந்து அந்த விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதையும் படியுங்க  ப்ளீஸ் விட்டுடுங்க.. கதறிய 4 சிறுமிகள்… விடாத 53 வயது மத போதகர்.. நெல்லை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
Republic Tamil

அப்போது, ரூ.11.09 லட்சம் மதிப்பிலான போலி ரூ.500 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அந்த விடுதியில் தங்கியிருந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரான சபீக் ரஹ்மான் (37) கைது செய்யப்பட்டார்.

சபீக் ரஹ்மானிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (40) என்பவரிடமிருந்தே கள்ளநோட்டுகள் கிடைத்ததாக அவர் தெரிவித்ததாக போலீசார் கூறினர். இதையடுத்து, தனிப்படை போலீசார் தஞ்சாவூருக்குச் சென்று ரவிச்சந்திரனை கைது செய்தனர்.

ரவிச்சந்திரன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.22.79 லட்சம் மதிப்பிலான இந்திய அசல் பணம், 4 பாஸ்போர்ட்டுகள் மற்றும் ரூ.9,000 மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், முந்தைய விசாரணையில் அவரது வீட்டில் இருந்து ரூ.21 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகளும் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ரவிச்சந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் பணியாற்றியபோது, அங்குள்ள கால் டாக்ஸி ஓட்டுநர்கள் மூலம் சர்வதேச கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டது தெரியவந்துள்ளது. பின்னர், கமிஷன் அடிப்படையில் கள்ளநோட்டுகளை இந்தியாவிற்குள் கடத்தும் முகவராக செயல்பட்டு வந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதையும் படியுங்க  உயர்கிறது மின்சார கட்டணம்..? பொதுமக்கள் கருத்து கேட்கும் ஒழுங்குமுறை ஆணையம்..!

இந்தக் கும்பலில் முக்கியப் பங்காற்றியதாகக் கருதப்படும் மலேசியாவைச் சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண், சென்னை விமான நிலையத்தில் தப்பிச் செல்ல முயன்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மலேசியாவில் வசித்து வரும் பரிமளா என்ற மற்றொரு பெண் மூலமாகவே கள்ளநோட்டுகள் தமிழ்நாட்டிற்குள் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், இந்த சர்வதேச கும்பல் ஒரு பெண் முகவர் மூலம் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகளை தமிழ்நாட்டிற்குள் கடத்தி, சத்தமில்லாமல் புழக்கத்தில் விட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை போலீசார் வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும், விடுதியில் கைதானவர்களிடமிருந்து கள்ளநோட்டுகளுடன் சேர்த்து ரூ.11.21 லட்சம் மதிப்பிலான இந்திய அசல் பணமும், 25,000 யூரோ வெளிநாட்டு நாணயமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்திய மதிப்பில் அதன் மதிப்பு சுமார் ரூ.27.59 லட்சம் எனக் கூறப்படுகிறது.

இந்த வழக்கின் பின்னணியில் செயல்பட்ட முழு கும்பலையும் கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மலேசியாவில் உள்ள முக்கிய குற்றவாளிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்க  "நடுரோட்டில் வீசப்பட்ட தலை.. 5 வயது பாலகனின் துடிதுடிப்பு மரணம்! நெல்லையை உலுக்கிய 15 ஆண்டுகால பழிக்குப்பழி பயங்கரம்!"

மேலும், தமிழகத்தில் கள்ளநோட்டுகள் யார்யாரிடம் கைமாறியுள்ளன, எத்தனை ஆண்டுகளாக இந்த கும்பல் செயல்பட்டு வருகிறது, வெளிநாட்டு தொடர்புகள் வேறு உள்ளனவா, தமிழகம் முழுவதும் எவ்வளவு அளவில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சென்னை காவல்துறை மற்றும் சிபிசிஐடி அதிகாரிகள் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சர்வதேச கள்ளநோட்டு கும்பலின் முழு வலையமைப்பையும் அம்பலப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago