https://republictn.com/

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வை அழிக்கும் அரக்கனாக ‘கந்துவட்டி’ கொடுமை தொடர்ந்து நீடித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தேனி மாவட்டத்தில் சமீப காலமாக கந்துவட்டித் தொல்லையால் பல குடும்பங்கள் சிதைந்து வருகின்றன. அந்த வகையில், கம்பம் பகுதியில் கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு அஞ்சி, பெற்ற பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு தம்பதியினர் அரளி விதை அரைத்து குடித்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது

தேனி மாவட்டம் கம்பம் தென்றல் நகர் பகுதியில் வசித்து வரும் சுப்பிரமணி மகன் வீரமணி இவர் இதே பகுதியில் எம்.ஜி என்ற செங்கல்சூளை நடத்தி வருகிறார். செங்கல்சூளை தொழிலுக்காக கம்பம், கூடலூர் பகுதிகளில் கந்து வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். செங்கல் சூளையில் பொதிய வருமானம் இல்லாததால் கந்து வட்டி காரர்களுக்கு வட்டி கொடுக்க முடியாமல் போனது.

இதனை தொடர்ந்து கந்து வட்டி கொடுத்தவர்கள் சுப்பிரமணி வீட்டிற்கு நேற்று இரவு சென்று வீரமணி மனைவியிடம் ”நீ தானே உன் புருசனுக்கு கடன் வாங்க கையெழுத்து போட்டாய். பணத்த கொடுக்க முடியலனா புருசன், பொண்டாட்டி இரண்டு பேரும் செத்துடுங்க” என கூறி தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர்.

தனது மகன் வீரமணியை கந்து வட்டி கொடுத்த பெண் திட்டுவதை பார்த்த வீரமணியின் தயாருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நடந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான வீரமணி, மனைவி காளீஸ்வரி இருவரும் இன்று காலை 14 வயதான மகள் நித்யாஸ்ரீ மற்றும் 12 வயது மகன் விக்னேஷ் இருவரையும் பள்ளிக்கு அனுப்பினர். பின்னர்
கணவன் மனைவி இருவரும் அரளி விதையை அரைத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர்.

தொடர்ந்து வீட்டின் முன்பு தம்பி வீரமணி வாந்தி எடுப்பதை பார்த்து அக்கா புவனேஷ்வரி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில், மனைவி காளீஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கணவர் வீரமணி உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிசைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கம்பம் தெற்கு காவல் துறையினர், வீரமணி வீட்டில் அவதூறாக பேசி தற்கொலைக்கு தூண்டிய கூடலூரை சேர்ந்த கார்த்திகா என்ற பெண்ணை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்ந்து தேனி மாவட்ட பகுதிகளில் கடன் தொல்லையால் இது போன்று கணவன் மனைவி குடும்பத்தினர் தற்கொலை செய்து வருவது அதிகரித்து வருகிறது. தேனி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கந்து வட்டி கும்பல்களை கண்டறிந்து இரும்பு கரம் கொண்டு அடக்குவாரா? என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.-

-த.முத்துவெளியப்பன்- தேனி மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 days ago at 4 days ago