பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நில விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான தகவல்களைப் பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான சட்டக் கருத்துகளை முன்வைத்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
பழனி கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், அமைச்சரின் உறவினர்கள் இருவரின் பெயரில் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதை முற்றிலும் ஆதாரமற்ற வதந்தி மற்றும் அவதூறு எனக் குறிப்பிட்ட அமைச்சர் ரமேஷ், “எனக்கு அப்படி எந்தவொரு உறவினரும் இல்லை. இது முழுக்க முழுக்க பொய்யான தகவல்” என்று விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, அறநிலையத்துறை அமைச்சரின் உதவியாளர் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், வினோத் சூர்யகுமார் என்பவர் மீது பொது அமைதியைக் குலைத்தல், கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக இந்திராணி மற்றும் பூர்ணிமா ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வினோத் சூர்யகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். தனது மனுவில், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி பல சக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சரவணன், “கோயில் நில விவகாரம் தொடர்பாக கிடைத்த தகவல்களை மட்டுமே சமூக வலைதளத்தில் பதிவிட்டோம். அமைச்சருக்கு எதிராக தனிப்பட்ட விரோதமோ அல்லது பழிவாங்கும் நோக்கமோ இல்லை” என்று வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி பல முக்கியமான கேள்விகளை எழுப்பினார்.

சமூக வலைதளப் பதிவுகள் மட்டுமே இருந்த நிலையில், பொது அமைதியைக் குலைத்தல் அல்லது கலவரத்தைத் தூண்டுதல் போன்ற குற்றப்பிரிவுகளை இந்த வழக்கில் எவ்வாறு பொருத்த முடியும் என்று அரசு தரப்பிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும், சமூக வலைதளப் பதிவுகள் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் தனிப்பட்ட முறையில் அவதூறு வழக்கு தொடர முடியும் நிலையில், குற்றப்பிரிவு போலீசார் மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் நீதிமன்றம் வினவியது.
இந்த வழக்கு குடிமக்களின் அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்துடன் தொடர்புடைய முக்கியமான விவகாரம் என்றும், அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பதற்கான உரிமை மற்றும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சுதந்திரத்தின் சட்ட வரம்புகள் குறித்தும் அரசு தரப்பு விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
மேலும், சமூக வலைதளப் பதிவுகளுக்காக பொதுவாக பொது அமைதியைக் குலைப்பது போன்ற கடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பாக எந்தவொரு பத்திரப்பதிவும் மேற்கொள்ளக் கூடாது என பழனி இணை ஆணையர் மூலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக உத்தரவு வழங்கப்பட்டிருந்ததாகவும், விதிமுறைகளை மீறிய தனியார் நபர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும் இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
“நிஜமாலுமே ‘பணம் காய்க்கும் மரம்’ இருக்கா? எங்கே இருக்கு தெரியுமா?”
இந்த வழக்கு, சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துகள், பேச்சுரிமை, கருத்துச் சுதந்திரம் மற்றும் அவதூறு சட்டங்களின் பயன்பாடு குறித்து முக்கியமான சட்ட விவாதமாக உருவெடுத்துள்ளது.
