Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தருமபுரி அருகே கடன் சுமை மற்றும் தொழில் நஷ்டம் காரணமாக, ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகளை கொலை செய்துவிட்டு, பின்னர் லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், கோட்டை கோயில் அருகே உள்ள அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (45). ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி சரண்யா (36), மகள் சாத்விகா (14). சாத்விகா அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஏற்பட்ட கடுமையான நஷ்டம் காரணமாக சந்தோஷுக்கு அதிகளவில் கடன் சுமை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், மனைவியின் நகைகளை அவரது அனுமதி இன்றி விற்றதாகவும், மாமனார் வீட்டாரிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், ஜூன் 30-ஆம் தேதி காலை பள்ளிக்குச் சென்ற தனது மகளை வீட்டிற்கு அழைத்து வந்த சந்தோஷ், பின்னர் மனைவி சரண்யாவை பெல்ட்டால் கழுத்தை நெரித்தும், மகள் சாத்விகாவை சுத்தியலால் தலையில் தாக்கியும் கொடூரமாகக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்க  இன்ஸ்டாகிராமில் காதல் வலை..! அதற்கு வற்புறுத்திய இளைஞன்..! மாணவி பகீர் முடிவு..!

அதன் பின்னர் வீட்டைப் பூட்டிவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அதியமான்கோட்டை பகுதிக்குச் சென்ற அவர், வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, வேகமாக வந்த லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்பாக சந்தோஷ், தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை அனுப்பியிருந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பதிவுகளில், தொழில் நஷ்டம் மற்றும் கடன் சுமை குறித்து குறிப்பிட்டதுடன், தனக்குக் கடன் கொடுத்தவர்களின் பட்டியலையும் வாசித்துள்ளார்.

மேலும், தனது சொத்துக்கள் மனைவியின் தம்பிக்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவே இந்தக் கொலையைச் செய்ததாகவும் தெரிவித்துள்ளார் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சாலை விபத்து தொடர்பாக விசாரணை நடத்தச் சென்ற அதியமான்கோட்டை போலீசார், சந்தோஷின் வீட்டில் மனைவி மற்றும் மகள் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, இருவரின் உடல்களையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, இந்த இரட்டைக் கொலை மற்றும் தற்கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்க  ''அதை எப்போதும் கையில பிடிச்சுக்கிட்டே இருப்பியா..?" கண்டித்த தாய்..! கல்லூரி விபரீத முடிவு..!

கடன் சுமை மற்றும் தொழில் நஷ்டம் காரணமாக நிகழ்ந்ததாகக் கூறப்படும் இந்த துயரச் சம்பவம், தருமபுரி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago