தமிழ் சீரியல் மற்றும் திரைப்பட நடிகையான காயத்ரி ரெமா, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தனக்கு ஆபாசமான புகைப்படங்களை அனுப்பி தொடர்ந்து தொல்லை கொடுத்த சுமார் 300 முதல் 400 பேரை பிளாக் செய்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவலைப் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், சமூக வலைதளங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் சைபர் அத்துமீறல்கள் குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
“இன்ஸ்டாகிராமில் எந்தவித கூச்சமோ, தயக்கமோ இல்லாமல் பலர் தங்களது ஆபாசமான தனிப்பட்ட புகைப்படங்களை நேரடிச் செய்தி (Direct Message – DM) மூலம் எனக்கு அனுப்பி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர். இதுபோன்ற செயலில் ஈடுபட்ட சுமார் 300 முதல் 400 பேரை நான் உடனடியாக பிளாக் செய்துள்ளேன். இப்படிப்பட்ட நபர்களிடமிருந்து தப்பிக்க அவர்களை பிளாக் செய்வதைத் தவிர தற்போது வேறு வழியில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற அத்துமீறல்கள் ஆரம்பித்த காலத்தில் பலமுறை காவல்துறையில் புகார் அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
“எவ்வளவுதான் புகார்கள் கொடுத்தாலும், சட்டரீதியான நடவடிக்கைகள் எடுத்தாலும், இதுபோன்ற நபர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் தொடர்ந்து புகார் அளிப்பதிலும், அதற்காக அலைவதிலும் சலிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு, அந்த கணக்குகளை நேரடியாக பிளாக் செய்வதே சிறந்த வழி என்று முடிவு செய்தேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் போர் கொடுத்த சவுக்கடி..! அம்பலமான இந்தியாவின் பலவீனம்..! அலர்ட் ஆன பிரதமர் மோடி..!
சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்துவது இயல்பான விஷயம் என்றும், அதனைத் தான் மதிப்பதாகவும் காயத்ரி ரெமா கூறியுள்ளார்.
“ரசிகர்கள் ‘உங்களை மிகவும் பிடிக்கும்’, ‘உங்களுடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும்’, ‘ஆட்டோகிராப் வேண்டும்’ என்று மெசேஜ் அனுப்புவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், எல்லை மீறி எந்தவித கூச்சமும் இல்லாமல் தங்களது அந்தரங்க ஆபாசப் புகைப்படங்களை அனுப்புவது மிகவும் அருவருப்பானதும், கண்டிக்கத்தக்கதுமான செயல்.” என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், சமூக வலைதளங்கள் என்பது இன்றைய தலைமுறைக்கு கிடைத்த மிகச் சிறந்த தொழில்நுட்ப வரப்பிரசாதம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதில் பல நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும், திறமைகளை வெளிப்படுத்தவும், தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்காகவும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இதுபோன்ற சிலர் சமூக வலைதளங்களை ஆபாசம் பரப்பவும், பெண்களுக்கு எதிராக சைபர் அத்துமீறல்களில் ஈடுபடவும் பயன்படுத்துவது மிகவும் வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சமூக வலைதள நிறுவனங்களும், சட்ட அமலாக்க அமைப்புகளும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
காயத்ரி ரெமா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியின் மூலம் முதன்முதலில் ரசிகர்களிடம் அறிமுகமானார். பின்னர் குறும்படங்களில் நடித்து தனது கலைப் பயணத்தைத் தொடர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து, 2015-ஆம் ஆண்டு எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் வெளியான “டூரிங் டாக்கீஸ்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
பின்னர் இரிடியம், ஒரு நாள், மங்களபுரம், ஹர ஹர மகாதேவ், காசி மேல காசு, பேய் இருக்க பயமேன் உள்ளிட்ட திரைப்படங்களிலும், “முகிலன்” உள்ளிட்ட வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது அவர் நடித்துள்ள “யார்ரா அந்த பையன்… நான் தான் அந்த பையன்” திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக அளித்த பேட்டியின்போதுதான், சமூக வலைதளங்களில் தனக்கு நேர்ந்த சைபர் தொல்லைகள் மற்றும் ஆபாசச் செய்திகள் குறித்து அவர் பகிர்ந்துள்ள இந்த தகவல், தற்போது சமூக வலைதளங்களில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு எதிரான இணையவழி அத்துமீறல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், நடிகை காயத்ரி ரெமாவின் இந்த வெளிப்படையான கருத்துகள், சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மீண்டும் முன்வைத்துள்ளன.
