Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல (Hydrogen Fuel Cell) தொழில்நுட்பத்தில் இயங்கும் ரயில் சேவையை, பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 17, 2026) கொடியசைத்து தொடங்கி வைத்தார். சுற்றுச்சூழலுக்கு உகந்த அதிநவீன பசுமை தொழில்நுட்பத்தில், முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த ரயில், இந்திய ரயில்வே வரலாற்றில் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஹைட்ரஜன் ரயில் சேவை, ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த் – சோனிபட் வழித்தடத்தில் தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 89 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த வழித்தடத்தில், தினசரி இரண்டு முறை ரயில் இயக்கப்பட உள்ளது.

ஜிந்த் ரயில் நிலையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஹைட்ரஜன் ரயில், 8 பயணிகள் பெட்டிகள் மற்றும் 2 பைலட் பெட்டிகள் என மொத்தம் 10 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. உலகின் பல நாடுகளில் இயக்கப்படும் ஹைட்ரஜன் ரயில்கள் மூன்று அல்லது நான்கு பெட்டிகளைக் கொண்டுள்ள நிலையில், 10 பெட்டிகளுடன் இயக்கப்படும் உலகின் நீளமான ஹைட்ரஜன் ரயிலாக இந்தியாவின் இந்த ரயில் தனித்துவம் பெற்றுள்ளது.

இதையும் படியுங்க  "பெற்றோர்களே ஒரு நொடி உஷார்! 3 வயது குழந்தையின் உயிரைப் பறித்த ஒரு குட்டி நிலக்கடலை…

ஒரே நேரத்தில் சுமார் 2,600 பயணிகள் பயணம் செய்யும் வகையில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில், மணிக்கு அதிகபட்சமாக 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டிருந்தாலும், பாதுகாப்பு மற்றும் சோதனை நோக்கங்களுக்காக முதற்கட்டமாக குறைந்த வேகத்தில் இயக்கப்பட உள்ளது. பின்னர் படிப்படியாக அதன் வேகம் அதிகரிக்கப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

Republic Tamil

இந்த ரயிலின் மிகப்பெரிய சிறப்பம்சம், இது நேரடியாக ஹைட்ரஜன் எரிவாயுவால் இயங்குவதில்லை என்பதாகும். மாறாக, ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் வேதிவினை மூலம் ரயிலுக்குள்ளேயே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த மின்சாரமே ரயிலை இயக்குகிறது.

இதற்காக 1,200 கிலோவாட் திறன் கொண்ட ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல உந்துவிசை அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமான மின்சார ரயில்களைப் போல மேல்நிலை மின்கம்பிகளின் உதவியும், டீசல் ரயில்களைப் போல எரிபொருள் எரிப்பும் இதில் இல்லை.

இந்த தொழில்நுட்பத்தின் காரணமாக, கார்பன் டைஆக்சைடு உள்ளிட்ட மாசு வாயுக்கள் வெளியேறாது. வெளியேறும் ஒரே பொருள் நீராவி (Water Vapour) மட்டுமே என்பதால், இது முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை ரயிலாகக் கருதப்படுகிறது.

இதையும் படியுங்க  "மோடி… மோடி …" கோஷங்களால் அதிர்ந்த மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவை அசத்திய 'மிஸ்டர் இந்தியா'!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ஹைட்ரஜன் ரயிலின் வடிவமைப்பில், சென்னையில் உள்ள இன்டிகிரல் கோச் ஃபேக்டரி (ICF) முக்கிய பங்காற்றியுள்ளது.

ஹைட்ரஜன் எரிபொருளை நிரப்புவதற்காக, ஜிந்த் ரயில் நிலையத்தில் பிரத்யேக ஹைட்ரஜன் நிரப்பும் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சுமார் 3,000 கிலோகிராம் ஹைட்ரஜன் எரிவாயுவை சேமித்து வைத்து, தேவைக்கேற்ப ரயிலுக்கு நிரப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஹைட்ரஜன் மிகவும் தூய்மையான எரிபொருளாக இருந்தாலும், எளிதில் தீப்பற்றக்கூடிய தன்மை கொண்டது. இதனால், மிகச் சிறிய கசிவைக் கூட உடனடியாக கண்டறியும் அதிநவீன பாதுகாப்பு அமைப்புகள் இந்த ரயிலில் பொருத்தப்பட்டுள்ளன.

பயணிகளின் வசதிக்காக, இந்த ரயிலின் கட்டணம் குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.25 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி, ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து, ஹைட்ரஜன் ரயில் சேவையை அறிமுகப்படுத்திய உலகின் ஆறாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

மேலும், இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டால், அடுத்த கட்டமாக கால்கா – சிம்லா உள்ளிட்ட மலைப்பாதைகளிலும் ஹைட்ரஜன் ரயில் சேவையை விரிவுபடுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இதையும் படியுங்க  குடையை ரெடி பண்ணுங்க... பருவமழை முன்கூட்டியே..!

பசுமை ஆற்றல், உள்நாட்டு தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த ஹைட்ரஜன் ரயில், இந்திய ரயில்வேயின் தொழில்நுட்ப முன்னேற்றத்தையும், நாட்டின் பசுமை போக்குவரத்து இலக்கையும் உலக அரங்கில் வெளிப்படுத்தும் முக்கிய சாதனையாகக் கருதப்படுகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago