தங்கம் விலை (Gold Rate) சரிவு தொடருமா? ஒரு சவரன் ரூ.80,000-க்கும் கீழ் வர வாய்ப்புள்ளதா, முதலீடு செய்யலாமா என்பது குறித்து பொருளாதார நிபுணர் நாகப்பன் விளக்குகிறார்.
தங்கம் விலை சரிவு நகை வாங்கக் காத்திருப்போருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.80,000-க்கும் கீழ் வர வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர் நாகப்பன் தெரிவித்துள்ளார். தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகச் சரிந்து வந்த நிலையில், இன்று சற்றே உயர்ந்துள்ளது. இதற்கான காரணங்கள், விலை மேலும் குறையுமா, இந்த நேரத்தில் முதலீடு செய்யலாமா என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த சில தினங்களாகத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. இதற்கு என்ன காரணம்? என்ற கேள்விக்கு, இதற்கு மூன்று முக்கியக் காரணங்களைச் சொல்லலாம். முதலாவதாக, இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் பணவீக்கம் தொடர்ந்து அதிகமாக உள்ளது. பணவீக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியாவிலும் சமீபகாலத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கிகள் பயன்படுத்தும் ஒரு வழி வட்டி விகிதத்தை உயர்த்துவது. இதன் மூலம் கடன் வாங்குவதற்கான செலவு அதிகரித்து, செலவினங்கள் குறையும்; பணத்தின் மதிப்பு உயரவும் வாய்ப்புள்ளது.
இரண்டாவது காரணம், அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்திருப்பது. இந்த ஆண்டின் தொடக்கத்திலும், கடந்த ஆண்டு இறுதியிலும் டாலர் குறியீடு சுமார் 96 ஆக இருந்தது. ஆனால், கடந்த வாரம் மற்றும் இந்த வார நிலவரப்படி அது 102-ஐ நெருங்கியுள்ளது. அதாவது, டாலரின் மதிப்பு சுமார் 6 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. பொதுவாக, டாலரின் மதிப்பு உயரும்போது அதற்கு நிகராகத் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது.
மூன்றாவது காரணம், போர் சூழலால் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்திருப்பது. கச்சா எண்ணெயைச் சில நாடுகளால் எளிதாக வாங்க முடியாத சூழலும், கப்பல் போக்குவரத்தில் உள்ள சிக்கல்களும் விலையை அதிகரித்துள்ளன. இதனால் பணவீக்கம் அதிகரிக்கும் சூழல் உருவாகும்போது, அந்த நெருக்கடியைச் சமாளிக்கத் தங்கத்தின் விலை உயர்ந்ததும் சில நாடுகளும் மத்திய வங்கிகளும் தங்கத்தை விற்கத் தொடங்குகின்றன. முன்புபோல் 15 அல்லது 20 சதவீதம் விலை உயர்வதற்கான வாய்ப்பு இப்போது குறைவாக உள்ளது. விலை சற்றே உயர்ந்தவுடன் விற்பனை அதிகரிக்கிறது; விலை குறையும்போது தயக்கத்துடன் சிலர் வாங்குகின்றனர். இதனால் தங்கத்தின் விலை தற்போது ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் ஏற்ற இறக்கத்துடன் நகர்ந்து வருகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1.30 லட்சத்திற்கும் மேல் இருந்தது. தற்போது ரூ.1.01 லட்சம் என்ற நிலையில் உள்ளது. தங்கத்தின் விலை மேலும் சரிந்து ரூ.80,000 வரை வரலாம் என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர். விலை மேலும் சரியுமா?
கடந்த ஆண்டு இறுதியில் இருந்ததைப் போலவும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்ததைப் போலவும் மிகப்பெரிய விலை உயர்வு, இந்த ஆண்டின் மீதமுள்ள காலத்திலோ அடுத்த ஆண்டிலோ ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாகவே தெரிகிறது. அதேபோல், மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்படும் என்றும் சொல்ல முடியாது. பெரிய ஏற்றத்துக்குப் பிறகு ஏற்பட்ட விலைத் திருத்தமாக இதைப் பார்க்கலாம். இனி தங்கத்தின் விலை சுமார் 4 முதல் 5 சதவீதம் வரையிலான ஏற்ற இறக்கத்துடன், ஒரே வரம்புக்குள் நகர வாய்ப்புள்ளது என்று நினைக்கிறேன்.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மேலும் 5 முதல் 10 சதவீதம் வரை குறைந்து, ஒரு அவுன்ஸ் 3,500 முதல் 3,600 டாலர் வரையிலான நிலையை எட்டுவதற்கான வாய்ப்பும் உள்ளது. அதே நேரத்தில், அந்த விலை நிலையை அடையும்போது வாங்குபவர்கள் வருவதற்கும் வாய்ப்புள்ளது. முன்பு 4,000, 4,500, 5,000 டாலர் என்ற விலை நிலைகளில் வாங்கும் வாய்ப்பைத் தவறவிட்டவர்கள், இப்போது வாங்க முன்வரலாம். அந்த நிலையில் ஒரு ஆதரவு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
தங்கத்தில் முதலீடு செய்யலாமா? ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பலரும் தங்கத்தில் முதலீடு செய்வதில் ஆர்வமாக உள்ளனர். இந்த நேரத்தில் முதலீடு செய்வது சரியாக இருக்குமா? என்ற கேள்விக்கு, ஒரு தனிநபரின் நிதி முதலீடுகள் என்பது வைப்புநிதி, பங்குச்சந்தை, தங்கம், வெள்ளி எனப் பல வகைகளில் இருக்கலாம். மொத்த முதலீட்டில் குறைந்தபட்சம் 5 முதல் 10 சதவீதம் வரை தங்கம் மற்றும் வெள்ளியில் வைத்திருப்பது நல்லது. அது முதலீட்டைப் பல்வகைப்படுத்த உதவும்.
நீண்டகால அடிப்படையில் தங்கத்தை முதலீடாகப் பார்ப்பவர்கள், தங்களது சொத்து ஒதுக்கீட்டுக்கு ஏற்ப முறையாக முதலீடு செய்யலாம். மாதந்தோறும் அல்லது வாரந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதற்கான காலகட்டம் தொடங்கியுள்ளதாகவே நான் நினைக்கிறேன்.
தங்கத்தை நேரடியாக வாங்குவது சரியாக இருக்குமா? அல்லது தங்கப் பத்திரங்கள் மூலம் முதலீடு செய்யலாமா? என்ற கேள்விக்கு, தங்கத்தில் முதலீடு என்று பார்க்கும்போது, ஆபரணத் தங்கம் பலருக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக இருக்கலாம். ஆனால், அதை முதலீடாகக் கருதுவது சற்றுக் கடினம். உதாரணமாக, கடந்த ஜனவரியில் தங்கத்தின் விலை உயர்ந்திருந்தபோது விற்றிருந்தால், இப்போது விலை குறைந்திருக்கும் நிலையில் மீண்டும் வாங்கியிருக்கலாம். ஆனால், கோல்டு ETF அல்லது சாவரின் கோல்டு பாண்ட் வைத்திருந்தால், சந்தையில் விற்று பணமாக்கியிருக்கலாம்; விலை குறையும்போது மீண்டும் வாங்கியிருக்கலாம்.
ஆபரணத் தங்கத்தைப் பொதுவாக அப்படிச் செய்வதில்லை. அதில் நமக்கு ஒரு மனத்தடை இருக்கிறது. எனவே, தங்கத்தை முதலீடாக அணுகும் பார்வை மாற வேண்டும். பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகும் கோல்டு ETF யூனிட்கள் நல்ல தேர்வாக இருக்கலாம். அவற்றை எளிதாக விற்று வெளியேற முடியும். அதற்கு அடுத்ததாக, புதிதாக அறிமுகமாகியுள்ள எலக்ட்ரானிக் கோல்டு ரிசீப்ட் என்ற முதலீட்டுத் தயாரிப்புக்கும் எதிர்காலத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தங்கத்தில் முதலீடு செய்தவர்கள், தற்போது விலை சரிவால் தயக்கத்தில் உள்ளனர். தங்கத்தை விற்றுவிடலாமா என்று யோசிப்பவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன? என்ற கேள்விக்கு, முதலில், இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பதற்றத்தில் முடிவெடுக்கக் கூடாது. தங்கத்தின் விலை உயர்வதற்குக் காரணம் பலர் வாங்குவது; விலை குறைவதற்குக் காரணம் பலர் விற்பது. ஆனால், பலர் ஏன் வாங்குகிறார்கள் என்பது பலருக்கும் தெரியாது. உண்மையில், மற்றவர்கள் வாங்குகிறார்கள் என்பதற்காகவே சிலரும் வாங்குவார்கள்.
அதேபோல், இப்போது பலர் விற்கலாம் என்ற பயத்தில் சிலர் விற்கத் தொடங்குகிறார்கள். தங்கத்தின் விலை ஏறிக்கொண்டிருக்கும்போது வாங்குகிறோம்; இறங்கும்போது வாங்காமல் தயங்குகிறோம் அல்லது விற்க நினைக்கிறோம். ஆனால், இந்தச் சூழலில் பதற்றப்பட்டு முடிவெடுப்பது சரியான அணுகுமுறை அல்ல. விலை உயரும்போது வாங்கிவிட்டு, இப்போது விலை குறையும்போது விற்றால், நமது நஷ்டத்தை நாமே உறுதிப்படுத்துகிறோம்.
எனவே, முறையான திட்டமிடல் அவசியம். சந்தை எந்தப் போக்கில் செல்லும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், சந்தை எந்தப் போக்கில் சென்றாலும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்து வைத்துக்கொள்வதே முக்கியம்.
