சமீபகாலமாக உலகளாவிய பொருளாதார மாற்றங்கள், பங்குச்சந்தை நிலவரங்களால் தங்கத்தின் விலையில் பெரும் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. சர்வதேச அளவில் “வங்கி அமைப்புகளின் கணிப்புப்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,250 டாலரைத் தொடும்; தமிழக அளவில் ஒரு சவரன் ₹72,000 வரை சரியக் கூடும்” என்ற தகவல்கள் மக்களிடையே பரவி வருகின்றன.
அதே வேளையில், “தங்கம் செயற்கையாகக் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இனி கிராம் ₹500-க்குக் கூட கேட்க ஆள் இருக்காது” அல்லது “சவரன் ₹22,000 அல்லது ₹60,000-க்கு வந்துவிடும்” என்ற பல்வேறு ஊகங்களும் கருத்துக்களும் நிலவி வருகின்றன.
இந்தச் சூழலில், தங்கத்தின் தற்போதைய சந்தை நிலைமை, முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது நகைக்கடை உரிமையாளர் சாந்தகுமார் கூறுகையில், ”2025 மார்ச் மாதத்தில் அமெரிக்கப் பொருளாதார நிபுணர் ஜான் டைலர், தங்கத்தின் விலை 37% வரை குறையும் எனக் கணித்திருந்தார். அதைப் பின்பற்றி உலக அளவில் பல விவாதங்கள் எழுந்தன. பேங்க் ஆஃப் அமெரிக்கா சந்தையின் வீழ்ச்சியைக் சுட்டிக்காட்டி விலை குறைவதற்கான வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது.

இந்த தற்காலிக வீழ்ச்சியைப் பொருட்படுத்தாமல், எதிர்காலத்தில் தங்கத்தின் விலை அவுன்ஸுக்கு 6,000 டாலர் முதல் 6,500 அல்லது 8,000 டாலர் வரை கூட உயர வாய்ப்புள்ளது எனக் கணிக்கின்றன.
முந்தைய காலங்களில் பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்தாலோ அல்லது போர்ப் பதற்றங்கள் எழுந்தாலோ தங்கத்தின் விலை உடனடியாக கணிசமாக உயரும். ஆனால், தற்போதைய ஜியோ-பாலிடிக்ஸ் (Geopolitics) மாற்றங்களால் இந்த பழைய விதிகள் மாறத் தொடங்கியுள்ளன:
சீனா பங்குச்சந்தை சுமார் 41% வரை சரிவைச் சந்தித்துள்ளது. இந்தியப் பங்குச்சந்தையும் தொடர் பலவீனத்துடன் காணப்படுகிறது. சர்வதேச அளவில் போர்ப் பதற்றங்கள் நிலவிய போதிலும், தங்கத்தின் விலை சட்டென்று சரிவைச் சந்தித்தது. இதனால், பங்குச்சந்தை குறைந்தால் தங்கம் ஏறும் என்ற பழைய விதி மாறி, தற்போதைய சூழலில் இரண்டுமே ஒரே நேரத்தில் சரிவைச் சந்திக்கும் அபூர்வ நிலை ஏற்பட்டுள்ளது.
தங்கம்-வெள்ளி விலை எந்தத் திசையில் செல்லும்?
இப்போதைய விலையே மிகக் குறைந்த விலை: நடப்பு ஆண்டில் ₹12,380 லிருந்து கிடுகிடுவென உயர்ந்து 99,000 கடந்து, சவரன் ₹1,16,000 வரை சென்ற தங்கம், தற்போது மீண்டும் ஒரு குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. வரவிருக்கும் நாட்களில் சவரனுக்கு மேலும் ₹2,000 வரை குறைய வாய்ப்பிருந்தாலும், இதுவே இந்த ஆண்டின் மிகக் குறைந்த விலையாக இருக்க அதிக சாத்தியம் உள்ளது.
சர்வதேச நிகழ்வுகள் மற்றும் தேர்தல்கள் நிறைவடைந்து அமைதியான சூழல் திரும்பத் தொடங்கினால், தங்கத்தின் விலை மீண்டும் சிறுகச் சிறுக உயரத் தொடங்கும். தங்கம் ₹1 லட்சத்திற்குக் கீழே சரிந்து ₹90,000 நிலைக்கு வந்தால் மட்டுமே, வெள்ளியின் விலை தற்போதைய ₹210-ல் இருந்து ₹175 வரை குறைய வாய்ப்புள்ளது.
தங்கம் மீண்டும் ஒரு லட்சத்திற்கு மேல் உயர ஆரம்பித்தால், வெள்ளியின் விலையும் அதைத் தொடர்ந்து உயரும். விலை இன்னும் குறையும், நாளை இன்னும் மலிவாகும் என்று காத்திருப்பவர்களுக்குத் ஏமாற்றமே மிஞ்ச வாய்ப்புள்ளது. எனவே, தங்கம் வாங்கத் திட்டமிட்டுப் பணத்தை வைத்துள்ளவர்கள் பின்வரும் உத்திகளைக் கையாளலாம்:
உங்களிடம் உள்ள மொத்தப் பணத்தையும் ஒரே நேரத்தில் முதலீடு செய்யாமல், 25% முதல் 30% வரை தற்போதைய குறைந்த விலையிலேயே வாங்கி முதலீடு செய்யுங்கள்.
விலை உயர்ந்தாலும் நிம்மதி
அடுத்த 10 நாட்களுக்குள் விலை உயரத் தொடங்கினாலும், “நல்ல வேளை, அந்த குறைந்த விலையில் ஓரளவு வாங்கிவிட்டோம்” என்ற திருப்தி உங்களுக்குக் கிடைக்கும்.
சந்தையில் என்னதான் புதிய டிசைன்களும் பொருளாதார மாற்றங்களும் வந்தாலும், நீண்ட கால அடிப்படையில் மற்ற முதலீடுகளை விட தங்கம் என்றும் தனது மதிப்பை இழக்காத பாதுகாப்பான முதலீடாகும். “விலை இன்னும் குறையும்” என்ற ஊகங்களை மட்டுமே நம்பி முழுமையாகக் காத்திருக்காமல், தற்போதைய சரிவைப் பயன்படுத்தி சிறுகச் சிறுக தங்கத்தில் முதலீடு செய்வதே புத்திசாலித்தனமான நகர்வாக இருக்கும்.
