https://republictn.com/

பேரணாம்பட்டு அருகே உள்ள மேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் ஆஷா ஆகியோர் திருமணமாகி இருந்தாலும், கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. சமீப காலமாகவே அவர்கள் மீண்டும் ஒன்றாக வாழத் தொடங்கியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களுடைய ஆறு வயது மகன் முகிலன், ஆஷாவின் தாய் வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். கடந்த 40 நாட்களுக்கு முன்பு, குழந்தையை அவரது தந்தை ராஜேஷின் தாயார் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முகிலன் உயிரிழந்ததாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து அங்கு சென்ற உறவினர்களிடம், குழந்தை வீட்டின் சுவரின் மீது ஏறியபோது கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் மேல்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து குழந்தையின் தாயார் ஆஷாவின் உறவினர்களும், சில பொதுமக்களும் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். ராஜேஷின் தாயார் மாந்திரீக செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், அதனுடன் தொடர்புடைய ஏதேனும் சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் அவர்கள் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, சம்பவம் நடைபெற்ற நாள் அமாவாசை தினமாக இருந்ததால் தங்களுக்கு கூடுதல் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், குழந்தையின் உடலில் முகம், முதுகு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காயங்கள் இருந்ததாகவும், அதுவே தங்களது சந்தேகத்திற்கு காரணமாக இருப்பதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், முகிலனுக்கு ஏற்கனவே இதய சம்பந்தமான உடல்நலப் பிரச்சனை இருந்ததாகவும், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் உறவினர்கள் கூறுகின்றனர். இருப்பினும், கடந்த ஐந்து ஆண்டுகளாக தங்களது பராமரிப்பில் இருந்த குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், ராஜேஷின் வீட்டிற்கு சென்ற 40 நாட்களுக்குள் குழந்தை உயிரிழந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, இந்த வழக்கில் ரேவதி என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முகிலனின் உடல் தற்போது வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே, குழந்தை சுவரிலிருந்து கீழே விழுந்ததால் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது தெளிவாக தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் மற்றும் ஊகங்கள் அப்பகுதியில் பரவி வரும் நிலையில், உண்மை நிலை பிரேத பரிசோதனை அறிக்கையும் காவல்துறை விசாரணையும் முடிவடைந்த பிறகே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago