சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு இல்லை என அதிகாரப்பூர்வமாகப் பதில் அளிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பெண்களின் மரியாதை மற்றும் உரிமைகள் குறித்து பேசும் அரசு, மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து சமூகங்களைச் சேர்ந்த ஏழை, உழைக்கும் பெண்களின் நிலை குறித்து கவனம் செலுத்தவில்லையா என்ற கேள்வி எழுகிறது.
“மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் விஜய்க்கு எதிராக தூய்மைப் பணியாளர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தூய்மைப் பணியாளர்கள் தங்களது நீண்டகால கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். பெண் தூய்மைப் பணியாளர்களுக்கு சட்டப்பூர்வமாக வழங்கப்பட வேண்டிய மகப்பேறு விடுப்பு முறையாக வழங்கப்படுவதில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு உரிய ஓய்வு அல்லது சிறப்பு அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். தாங்கள் பணிபுரியும் பல்வேறு வார்டுகளில் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் முறையான கழிப்பறை வசதிகளும், ஓய்வறைகளும் அமைத்துத் தரப்படவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் (NULM) கீழ் பணிபுரியும் தங்களைத் தொடர்ந்து தற்காலிகப் பணியாளர்களாக வைத்திருக்காமல், உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், தூய்மைப் பணிகளைத் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் நடவடிக்கையை அரசு முற்றிலும் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் தங்களது நீண்டகால கோரிக்கைகளுக்கு இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றும், தங்களைப் பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்கவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
மகப்பேறு விடுப்பு வழங்க முடியாது என அதிகாரப்பூர்வமாகப் பதில் அளிக்கப்பட்டிருந்தால், அதற்கு மாநகராட்சி நிர்வாகமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும். இவ்வளவு முக்கியமான விவகாரத்தில் தரக்குறைவான மற்றும் அலட்சியமான பதில் அளிக்கப்பட்டிருப்பதைத் தட்டிக்கேட்க வேண்டிய அவசியம் உள்ளது.
இந்த அரசு தொடர்ந்து, “90 நாட்கள் கால அவகாசம் வேண்டும்; இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றன” என்று கூறுகிறது. ஆனால், மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கு கால அவகாசம் தேவையா? பிரசவிக்கும் பெண் தொழிலாளிக்கு உரிய விடுப்பு வழங்குவதற்கே இவ்வளவு காலம் தேவையா? உழைக்கும் மக்களுக்கு சம்பளம் வழங்குவதற்கும் கால அவகாசம் வேண்டுமா?
இன்று ஒரு தொழிலாளிக்கு ரூ.6,000 சம்பளம் வழங்கப்பட்டால், அந்தத் தொகையில் ஒருவர் எப்படி வாழ்க்கையை நடத்த முடியும்? முதலமைச்சரோ, அமைச்சர்களோ அல்லது உயர் பதவிகளில் இருப்பவர்களோ ரூ.6,000 சம்பளத்தில் வாழ முடியுமா? இந்த அளவுக்கு உழைக்கும் மக்கள் கேவலமாக நடத்தப்பட வேண்டுமா?
ரூ.12,817 வழங்க வேண்டிய நிலையில், அதில் ரூ.6,817 குறைக்கப்படுவதற்கு யார் பதில் சொல்வார்கள்? இந்த ஊதியத்தை நிர்ணயம் செய்தது அரசாங்கம்தான். அதை வழங்க வேண்டிய பொறுப்பும் அரசாங்கத்துக்குத்தான் உள்ளது.
சட்டப்படி நாங்கள் கேட்ட உரிமைகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆனால், உச்சநீதிமன்றத்தில் சென்று இந்த ஊதியத்தையே வழங்கக்கூடாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆட்சியில் சமூகநீதி இல்லை என்று விமர்சித்த நீங்கள், ஆட்சிக்கு வந்த பிறகு என்ன மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள்? கடந்த ஆட்சியில் என்ன நடந்ததோ அதையே தொடர்வதாகவே தெரிகிறது. அதே அதிகாரிகளைச் செயலாளர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளில் நியமித்து, அதே நடைமுறைகளையே பின்பற்றுகிறீர்கள்.
2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், நகராட்சி நிர்வாகத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு அரசு உரிய பதில் அளிக்க வேண்டும்.
அரசாணை எண் 62-ன் அடிப்படையில் ஊதியம் வழங்குவது, பணிநிரந்தரம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு அரசு பதில் அளிக்க வேண்டும். அரசு பதில் சொல்ல வேண்டும் என்பதற்காகவும், எங்களுடைய உரிமைகளை நிலைநாட்டுவதற்காகவும், சென்னை உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு எங்களை கைது செய்ததுடன், காவல்துறை அத்துமீறலும் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 13ஆம் தேதி பேரணி நடத்துகிறோம். இந்த அரசுக்கு நாங்கள் தெளிவாகச் சொல்ல விரும்புவது என்னவென்றால், வரும் 24ஆம் தேதி சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். 24ஆம் தேதிக்குள் அரசு பதில் அளித்தே தீர வேண்டும் என்ற நிலையை நாங்கள் உருவாக்குவோம்.
இந்த அரசு, தேர்தல் வாக்குறுதியின்படி பணிநிரந்தரம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு அரசாணை எண் 62-ன் அடிப்படையில் உரிய ஊதியம் வழங்க வேண்டும்.
பெண் தொழிலாளர்களுக்கு முறையான கழிப்பறை வசதி, ஓய்வறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். மகப்பேறு விடுப்பு, வார விடுப்பு, தேசிய விடுப்பு, பண்டிகை விடுப்பு, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட அனைத்து சட்டப்பூர்வ பணிப் பயன்களையும் வழங்க வேண்டும்.
அடித்தட்டு மக்கள் எதையும் செய்ய மாட்டார்கள், சினிமா பாடல்களுக்கும் நடனங்களுக்கும் மயங்கி இருப்பார்கள் என்று நினைத்தால் அது தவறு. அடித்தட்டு மக்களும் உழைக்கும் மக்களும் தங்களுடைய உரிமைகளை நன்கு அறிந்தவர்கள். அவர்களின் உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது. அரசு என்ன நினைத்தாலும், உழைக்கும் மக்கள் தங்களுடைய உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பார்கள்.
