Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சென்னையில் பக்கிங்காம் கால்வாய் அருகிலுள்ள சதுப்புநிலப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சோழிங்கநல்லூர் மற்றும் கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) பகுதிகளை இணைக்கும் கலைஞர் கருணாநிதி சாலையோரம், பக்கிங்காம் கால்வாய் அருகே உள்ள சதுப்புநிலப் பகுதியில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கோடை வெயிலின் கடுமையான தாக்கத்தால் அப்பகுதியில் இருந்த கோரைப்புற்கள் மற்றும் உலர்ந்த தாவரங்கள் முற்றிலும் காய்ந்த நிலையில் காணப்பட்டன. இந்த நிலையில், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ, பலத்த காற்றின் காரணமாக நொடிப்பொழுதில் வேகமாக பரவியது.

இந்த தீ விபத்தில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் இருந்த கோரைப்புற்கள் மற்றும் தாவரங்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த மேடவாக்கம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்க  கோவையை உலுக்கிய கொடூரம்… சடலமாக மீண்ட சிறுமி

எனினும், பலத்த காற்று மற்றும் காய்ந்த தாவரங்கள் காரணமாக தீ தொடர்ந்து பரவி வருவதால், அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. இந்த புகை அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கும் பரவி வருவதால், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு போலீசார் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

அதன்படி, அருகில் வசிக்கும் பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், புகை வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்க ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து கோடை வெப்பத்தால் ஏற்பட்டதா அல்லது சமூக விரோதிகள் யாரேனும் வேண்டுமென்றே தீ வைத்தார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், சோழிங்கநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago