Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

திருநெல்வேலியில் இன்று காலை பயங்கர சம்பவம் அரங்கேறியுள்ளது. டவுன் பகுதியில் வாலிபர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம், திருநெல்வேலி மாநகரம் முழுவதும் பரபரப்பையும் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவலின்படி, திருநெல்வேலி டவுன் அருகே பாறையடி மந்திரமூர்த்தி தெருவைச் சேர்ந்த குருநாதனின் மகன், 38 வயதான ஆவுடையப்பன், பிளம்பர் தொழில் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. திருமணமான இவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலை சுமார் 9.15 மணி அளவில், திருநெல்வேலி டவுன் மெயின் சாலையில் உள்ள சுடுகாடு அருகே ஆவுடையப்பன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து சுற்றி வளைத்து, கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் ஆவுடையப்பனின் முகத்தில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டதால், முகம் முழுவதும் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

இதையும் படியுங்க  சீறும் சிங்கப்பெண்கள் படை.. குற்றவாளிகளுக்கு நடுக்கம்! தொடக்க விழாவில் CM விஜய் முழு உரை!

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி டவுன் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையைத் தொடங்கினர்.

இதனிடையே, தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆவுடையப்பனின் மனைவி மற்றும் உறவினர்கள், அவரது உடலைக் கண்டு கதறி அழுதது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இந்தக் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நடமாட்டமும் போக்குவரத்தும் அதிகமாக இருந்த பட்டப்பகலில் இந்தக் கொடூரக் கொலையை அரங்கேற்றியவர்கள் யார், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து திருநெல்வேலி மாநகர காவல்துறையின் துணை ஆணையர் அன்சுல் நாகர் கூறுகையில், முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

இதற்கிடையில், கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படியுங்க  வாய் தகராறில் முடிந்த உயிர்: சிவகங்கையில் 10-ஆம் வகுப்பு மாணவன் கொலை.. சீரழியும் இளம்தலைமுறை!

பின்னர், துணை ஆணையர் அன்சுல் நாகர் மற்றும் டவுன் காவல் ஆய்வாளர் காசிபாண்டியன் ஆகியோர் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகரில் பட்டப்பகலில் நிகழ்ந்த இந்தக் கொடூரக் கொலைச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மர்ம நபர்களை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago