தவெக தலைவர் விஜய் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு, இன்னும் சில மாதங்களிலேயே கவிழ்ந்துவிடும் என்றும், இந்த ஆட்சி அதிகபட்சம் ஆறு மாதங்கள் மட்டுமே நீடிக்கும் என்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லண்டன் புறப்படும் முன்பாகக் கூறியுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இதன் பின்னணியில் உள்ள சட்ட சிக்கல்கள், குதிரை பேரக் குற்றச்சாட்டுகள், கூட்டணிக் கட்சிகளுக்குள் நடக்கும் ரகசிய அரசியல் சதிகளை உடைத்துள்ளார் பத்திரிகையாளரும், யூடியூபருமான உமாபதி. இதுகுறித்து அவர், ”கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த முக்கியப் பிரமுகர்கள் விஜய்யின் தவெக-வில் இணைந்து வருகின்றனர். இதற்கிடையே, திமுகவின் முக்கியப் புள்ளியான அனிதா ராதாகிருஷ்ணன் சமீபத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “என்னை எதிர்த்தரப்பினர் விலை பேச முயன்றனர்” என்ற பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால், யார் விலை பேசினார்கள் என்ற விவரங்களையோ அல்லது அதற்கான அதிகாரப்பூர்வப் புகாரையோ அவர் அளிக்கவில்லை. மறுபுறம், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான யூடியூபர் திருநாவுக்கரசு மற்றும் இரு இளைஞர்களைக் காவல்துறை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தது.
இந்த விசாரணையில், தவெக அரசை வீழ்த்த திமுக தரப்பில் பின்னணியில் மிகப்பெரிய ‘ஆபரேஷன்’ ஒன்று திட்டமிடப்பட்டதாகக் காவல்துறை வட்டாரங்கள் மூலம் தகவல்கள் கசிந்துள்ளன.
சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம்
தமிழகச் சட்டமன்றத்தின் மொத்த இடங்கள் 234. இதில் தனிப் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. ஆனால், தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் கைவசம் 107 இடங்கள் மட்டுமே உள்ளன. (அவர் ஒரு இடத்தை ராஜினாமா செய்ததால் சபாநாயகர் நீங்கலாக 105 அல்லது 106 இடங்கள் மட்டுமே கணக்கில் வரும்). ஆரம்பத்தில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் அதிமுக-விலிருந்து பிரிந்து வந்த 28 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடுதான் விஜய் தனது மெஜாரிட்டியை நிரூபித்தார். சட்டப்படி, ஒரு ஆட்சியை எதிர்த்து உடனடியாக மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடியாது.
அதற்கு ஆறு மாத காலம் அவகாசம் தேவை. இதனால், எதிர்க்கட்சிகள் மாற்று வழியை யோசித்தன. முதலமைச்சர் மீது நேரடியாகத் தீர்மானம் கொண்டு வருவதற்குப் பதிலாக, சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது. சபாநாயகர் மீதான வாக்கெடுப்பில் தவெக-வின் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்களை மாற்றி ஓட்டு போட வைப்பது. இதற்காக திமுகவைச் சேர்ந்த செந்தில் பாலாஜி, தவெக-வின் 10 எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுக்க, ஒரு எம்.எல்.ஏ-வுக்கு தலா 35 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 350 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது. இதில் ஒரு குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனம் மூலம் 160 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை செய்ய முயன்றதாகவும், அதுகுறித்த தொலைபேசி உரையாடல் ஆதாரங்கள் சிக்கியதால்தான் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த சதித்திட்டம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி, அவரது சகோதரருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விஜய் அரசுக்கு ஆதரவளித்த ஆதிமுகவின் 28 எம்.எல்.ஏ-க்களின் நிலை இப்போது அந்தோ பரிதாபமாக மாறியுள்ளது. சட்டப்படி ஒரு கட்சியை உடைக்க வேண்டும் என்றால், மூன்றில் இரண்டு பங்கு (அதாவது குறைந்தது 33 எம்.எல்.ஏ-க்கள்) பிரிந்து வர வேண்டும். ஆனால், சி.வி.சண்முகம், வேலுமணி போன்றவர்கள் முயன்றும் 28 பேரை மட்டுமே திரட்ட முடிந்தது. எடப்பாடி பழனிசாமி ஐந்து எம்.எல்.ஏ-க்களைத் தடுத்து நிறுத்தி, இவர்களின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டார்.
இதனால், அதிருப்தியடைந்த விஜய் தரப்பு, இவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி அமைச்சர் பதவிகளை வழங்கவில்லை. இதனால் “அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட” கதையாக மாறிய அதிமுக எம்.எல்.ஏ-க்கள், மீண்டும் இபிஎஸ்ஸிடமே சரணடைந்து மன்னிப்புக் கேட்டு கட்சியில் இணைந்து வருகின்றனர். இதில் எடப்பாடி பழனிசாமி மிகவும் சாணக்கியத்தனமாகச் செயல்பட்டு, தனக்கு எதிராகக் குடைச்சல் கொடுத்தவர்களின் மாவட்டச் செயலாளர் பதவிகளைப் பிடுங்கிவிட்டு, அவர்களை வெறும் சாதாரண உறுப்பினர்களாக மட்டுமே சேர்த்துக் கொண்டுள்ளார்.

திமு.க. ஸ்டாலின் “ஆறு மாதத்தில் ஆட்சி கவிழும்” என்று உறுதியாகக் கூறியதற்குப் பின்னால் மற்றொரு சட்ட ரீதியான காரணமும் இருக்கிறது.
ஆட்சி கவிழ்ப்புக்கான 3 முக்கிய வழிகள்
குதிரை பேரக் குற்றச்சாட்டு நிரூபணமானால் ஆளுநர் ஆட்சியை கலைக்கலாம். தேர்தல் ஆணையம் தலையிட்டு எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் குறித்து நடவடிக்கை எடுக்கலாம். காங்கிரஸ் அல்லது விசிக கூட்டாணியில் இருந்து விலகினால் மெஜாரிட்டி தானாகவே குறையும்.
தற்போது திமுக-அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தனித்தனியாகத் தமிழக ஆளுநரைச் சந்தித்துப் புகார் மனுக்களை அளித்துள்ளன. அதிமுகவை உடைத்து, குதிரை பேரம் பேசித்தான் விஜய் அரசு மெஜாரிட்டியை நிரூபித்தது என்பதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. சட்ட விதிகளின்படி, குதிரை பேரத்தில் எம்.எல்.ஏ-க்கள் வாங்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால், ஆளுநரோ அல்லது மத்திய அரசோ நினைத்தால் ஒரே நாளில் ஆட்சியை கலைக்க முடியும்.
புழல் சிறையில் ரவுடி வெள்ளைக்காளியை கொல்ல ரூ.1 கோடி டீல்? 4 கைதிகள் மீது அதிர்ச்சி தகவல்!அதேபோல், தற்போதைய கூட்டணியில் இருக்கும் விசிக தலைவர் திருமாவளவனை மீண்டும் திமுக பக்கம் இழுக்கவும், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மீது போக்சோ போன்ற சட்ட நடவடிக்கைகளைப் பாய்ச்சி அவர்களைக் கூட்டணியில் இருந்து கழற்றிவிட பாஜக திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் விஜய் தனது பலத்தை நிரூபித்திருந்தாலும், அது ஒரு ‘மைனாரிட்டி’ அரசுதான். அதிமுகவில் இருந்து விலகிய 6 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்த விவகாரத்திலும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. பணபலம், அதிகாரப் பகிர்வு ஆகியவற்றின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்த தற்காலிகக் கூட்டணி, மத்திய அரசின் காய்நகர்த்தல்களாலும், எதிர்க்கட்சிகளின் வியூகங்களாலும் எந்த நேரத்திலும் உடையலாம் என்பதே தற்போதைய நிதர்சனம். தமிழக அரசியல் வரலாற்றில் இந்த அடுத்த நான்கு மாதங்கள் மிக முக்கியமான திருப்புமுனையாக அமையப் போகின்றன.

[…] […]