அமைச்சர் சி விஜயபாஸ்கரின் குவாரி மீது மட்டும் ரூ 500 கோடி அபராதம் செலுத்த வேண்டி உள்ளது. ஊழல் பின்னணி கொண்டவர்கள் த.வெ.கவிற்கு வந்தால், அவர்கள் மீது நீங்கள் வழக்குத் தொடுத்து நடவடிக்கை எடுப்பீர்களா? மாட்டீர்களா? விஜய்க்கு தைரியம் இருக்கிறதா?” என திமுக எம்.பி., தங்கத்தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேனி நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மந்திச்சுனை கிராமத்தில் புதிய கால்நடை மருத்துவமனை, வருசநாடு தர்மராஜபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 150 மீட்டர் பேவர் பிளாக் சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகளை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார்.
ஏலக்காய் மண்டியில் முடங்கிய ஓபிஎஸ்… தவெக நோக்கி நகரும் மகன்… தவிக்கும் ‘தர்மயுத்த’ நாயகன்!
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ”’அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகிச் செல்வதால் திமுக பலவீனமடைகிறதா?’ என்ற கேள்விக்கு, ”திமுக எப்போதும் போலவே மிகவும் பலமாகவும், ஸ்ட்ராங்காகவும் இருக்கிறது. எங்களுக்கு எதற்கு பலவீனம்? கட்சியை விட்டுப் போகிறவர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள்தான் போகிறார்கள். வரக்கூடிய காலகட்டங்களில் எந்தத் தேர்தல் வந்தாலும் திமுக மிக பிரம்மாண்டமாக ஜெயித்து முன்னிலை வகிக்கும் என்பதை நாங்கள் நிரூபிப்போம்” என்றார்.
‘முன்னாள் அமைச்சர்கள் மீதான திமுக அரசின் வழக்குகள் பழிவாங்கும் நடவடிக்கையா?’ என்ற கேள்விக்கு, ”தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான தண்டனையைப் பெற்றே ஆக வேண்டும். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் எல்லோர் மீதுமே ஊழல் வழக்குகள் இருக்கின்றன. குறிப்பாகப் புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர் குவாரி வழக்கில் மட்டும் 500 கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டிய சூழல் இருக்கிறது. இப்படிப்பட்ட ஊழல் பின்னணி கொண்டவர்கள் உங்கள் கட்சிக்கு வந்தால், அவர்கள் மீது நீங்கள் வழக்குத் தொடுத்து நடவடிக்கை எடுப்பீர்களா மாட்டீர்களா? அப்படி நீங்கள் தைரியமாக நடவடிக்கை எடுத்தால் மட்டும்தான் ஜோசப் விஜய் அவர்களின் ஆட்சி நல்ல ஆட்சி என்று நான் சொல்வேன்” என்றார்.
வைகோவின் திமுக மீதான விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு, ”தேர்தலுக்கு முன்பு வரை திமுகவை வைகோ மிக உயர்வாகப் புகழ்ந்து பேசினார். தேர்தலுக்குப் பிறகு உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்ற அவரது கட்சி எம்.எல்.ஏ-க்கள் இருவர், தங்களை ஏன் மறுதேர்தல் நடத்தச் சொல்கிறீர்கள்? நாங்கள் திமுகவிலேயே இருந்து கொள்கிறோம்” என்று பெருந்தன்மையாகக் கூறி திமுகவோடு இணைந்து செயல்படுகிறார்கள். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அண்ணன் வைகோ தற்போது வசைபாடி வருகிறார், இதற்கு காலம்தான் தகுந்த பதில் சொல்லும்” என்றார்.
“நெருப்பாக மாறும் தூங்கா நகரம்! ஆக்ஸ்போர்டு ஆய்வின் பகீர் பின்னணி!”
விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த கேள்விக்கு பதிலளித்த தங்கத்தமிழ்ச்செல்வன், ”75 ஆயிரம் ரூபாய் வரை கடன் வாங்கியவர்களுக்கு முழு கடன் தள்ளுபடி என்றும், மற்றவர்களுக்கு 35 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி என்றும் ஒரு கணக்கு சொல்கிறார்கள். ஆனால், மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன், அதற்கான வட்டி என அனைத்தையுமே முழுமையாகத் தள்ளுபடி செய்து சாதனை படைத்தார். அதுபோன்ற ஒரு மாபெரும் மக்கள் நல ஆட்சியைத் தந்து, விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை ஜோசப் விஜய் முதலமைச்சராகி நிறைவேற்ற முடியுமா? என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்” என கூறினார்.
-முத்துவெளியப்பன், தேனி, சிறப்பு நிருபர்

[…] விஜய்யின் நல்லாட்சிக்கு திமுக எம்.பி… […]